ஹர்திக் பாண்டியாவை மிஸ் செய்கிறோம்.. அவர் முடிவை தடுக்கவில்லை.. ஏன் தெரியுமா? நெஹ்ரா விளக்கம்!
மும்பை அணிக்கு மாறுதலாகும் முடிவை ஹர்திக் பாண்டியா எடுத்த போது நான் தடுக்காமல் இருந்தது ஏன் என்று குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா விளக்கம் அளித்துள்ளார்.
குஜராத் அணிக்காக விளையாடிய 2 ஆண்டுகளில் ஒரு முறை சாம்பியன் பட்டத்தையும், இன்னொரு சீசனில் இறுதிப்போட்டி வரையும் அழைத்து சென்றவர் ஹர்திக் பாண்டியா. இதனால் குஜராத் அணி பலம் வாய்ந்த அணியாக உருவாகி வந்த நிலையில், திடீரென அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு டிரான்ஸ்ஃபர் முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதற்காக மும்பை அணி ரூ.100 கோடிக்கும் அதிக தொகையை செலவழித்ததாக தகவல் வெளியாகியது. இதன்பின் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் குஜராத் அணி தனது முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து களமிறங்கவுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆர்வமடைந்துள்ளனர்.
இதுகுறித்து குஜராத் அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா பேசுகையில், 2022ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா லக்னோ அணிக்கு ஒப்பந்தம் செய்யப்படுவதாக இருந்தார். ஆனால் குஜராத் அணிக்காக நான் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதன்பின் அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் இம்முறை ஹர்திக் பாண்டியாவை தடுக்க நான் எந்த முயற்சியும் செய்யவில்லை.
இதேபோல் புதிய அணிக்காக ஹர்திக் பாண்டியா சென்றிருந்தால் தடுத்திருக்கலாம். ஆனால் ஏற்கனவே பல ஆண்டுகள் விளையாடிய அணிக்கு இன்னும் நல்ல நிலையில் ஹர்திக் பாண்டியா திரும்ப முடிவெடுத்துள்ளார். இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் கிட்டத்தட்ட கால்பந்து விளையாட்டுக்கு ஏற்றாற் போல் மாறி வருகிறது. கால்பந்தை போல் வரும் நாட்களில் இன்னும் பல அதிர்ச்சியடையும் டிரேட்களை பார்க்க முடியும்.
குஜராத் அணியும் ஹர்திக் பாண்டியாவை மிஸ் செய்கிறது. ஆனால் இது அவருக்கு புதிய வாய்ப்பாக பார்க்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் புதிய ஒன்றை கற்றுக் கொடுக்கிறது. அவருக்கு வாழ்த்துகள். குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் இருக்கிறார். இந்த வாய்ப்பில் ஒரு மனிதராகவும் எப்படி உயர்கிறாரோ, அதே அளவிற்கு கேப்டன்சியிலும் முன்னேறுவார் என்று தெரிவித்துள்ளார்.