நாம் திரேதா யுகத்தில் இருப்பது போல் தோன்றுகிறது: யோகி ஆதித்யநாத்!

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து வயதுடைய குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அச்சிலைக்கு கோயில் அர்ச்சகர் வழிகாட்டுதலின் கீழ் பிரதிஷ்டை பூஜைகளை பிரதமர் மோடி செய்தார்.

இதையடுத்து, அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஐந்து வயது பாலகனாக அயோத்தி கோயிலில் ராமர் அருள் பாலிக்கிறார். அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேக விழாவுக்கு பிறகு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாம் திரேதா யுகத்தில் இருப்பது போல் தோன்றுகிறது என்றார். “ஒட்டுமொத்த தேசமும் ராமர் பக்தியில் மூழ்கியுள்ளது. நாம் ‘திரேதா யுகத்தில் இருப்பது போன்று தோன்றுகிறது.” என அவர் கூறினார்.

“முழு உலகமும் – குறிப்பாக அயோத்தி இந்த வரலாற்று தருணத்தில் மகிழ்ச்சியடைந்துள்ளது. ராமர் கோவில் கட்டுமானத்தின் ஒரு பகுதியாக மாறியவர்கள் – இந்த தருணத்தைக் காண்பது உண்மையில் பாக்கியம்.” எனவும் அவர் கூறினார். 500 வருட காத்திருப்புக்குப் பிறகு கோயில் கட்டப்பட்டுள்ளது நம் அனைவருக்கும் உணர்ச்சிகரமான தருணம் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “எனது இதயத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில், நாட்டின் ஒவ்வொரு நகரமும், கிராமமும் அயோத்தியாக மாறி, ஒவ்வொரு பாதையும் ராம ஜென்மபூமியை நோக்கிச் செல்வதாகத் தெரிகிறது.” என்றார்.

திரேதா யுகம் என்றால் என்ன?

இந்து தத்துவத்தின் படி, யுகங்கள் என்பது மனிதகுலத்தின் நான்கு வெவ்வேறு யுகங்களைக் குறிக்கின்றன. தற்போது நாம் கலியுகத்தில் இருக்கிறோம். திரேதா யுகம் என்பது நான்கு யுகங்களில் இரண்டாவது யுகத்தின் சமஸ்கிருதப் பெயர். திரேதா யுகம் 1,296,000 ஆண்டுகள் நீடித்ததாகவும், விவசாயம் மற்றும் சுரங்கத்தின் தோற்றம் போன்ற முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்ததாகவும் கூறுகிறார்கள்.

இந்த யுகத்தில் விஷ்ணுவின் மூன்று அவதாரங்கள் தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது அவதாரங்கள் முறையே, வாமனன், பரசுராமன் மற்றும் ராமர் அவதாரங்கள் இந்த யுகத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *