“மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த விரும்புகிறோம்” – ராகுல் காந்தி
மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அவர்களோடு காங்கிரஸ் கட்சி இருப்பதாகவும், மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த விரும்புவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்ட ராகுல் காந்தி, இதன் இரண்டாம் கட்ட யாத்திரையை மணிப்பூரில் இருந்து மும்பை வரை மேற்கொண்டு வருகிறார். கடந்த 14-ம் தேதி யாத்திரை தொடங்கிய நிலையில், மணிப்பூரின் கரோங் நகருக்கு அவரது யாத்திரை வந்தது. அங்கு கூடிய மக்கள், ‘ராகுல் காந்தி வாழ்க’ என்றும், ‘எங்களுக்குத் தேவை தனி நிர்வாகம்’ என்றும் கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, “உங்கள் வலிகளை நான் உணர்ந்திருக்கிறேன். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களை, சொத்துக்களை இழந்திருக்கிறீர்கள். நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்பதையும், மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த விரும்புகிறோம் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கரோங், குகி மக்கள் வாழும் பகுதி என்பதால், அவர்கள் தங்கள் பகுதியில் ஆங்காங்கே, மைதேயி சமூகத்தவர்கள் உள்ளே வர அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர். அதேநேரத்தில், மற்றவர்களை குகி நிலத்துக்கு வரவேற்பதாகவும் அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மே 3ம் தேதி குகி மற்றம் மெய்தி சமூகத்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் தாக்கம் இன்னமும் அப்படியே இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, மெய்தி சமூகத்தைச் சேர்ந்த மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கீஷாம் மெகாசந்திர சிங், முன்னாள் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் ஆகியோர் ராகுல் காந்தியின் யாத்திரையில் அங்கு செல்லவில்லை.
இது குறித்து குறிப்பிட்ட காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், “இங்குள்ள நிலைமையை நாங்கள் அறிந்திருக்கிறோம். அதன் காரணமாகவே அமைதி மற்றம் நல்லிணக்கத்துக்கான செய்தியுடன் ராகுல் காந்தி இங்கே வந்துள்ளார். மெய்தி அல்லது குகி என இரண்டு சமூகங்களுமே ராகுல் காந்தி மீது நம்பிக்கை வைத்துள்ளன. இரண்டு சமூகங்களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய தலைவராக அவரைப் பார்க்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
மணிப்பூர் மக்களின் மனநிலை குறித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியுடன் குகி நிலப்பகுதிக்கு வர வேண்டும் என்று அங்குள்ள அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன. அனைத்துத் தரப்புமே அமைதியையே விரும்புகிறார்கள்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து நாகாலாந்தின் கோஹிமா நகருக்குச் சென்ற ராகுல் காந்தி அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “சிறிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என நீங்கள் எண்ணாதீர்கள். சிறிய மாநிலமோ, பெரிய மாநிலமோ அனைவரும் இந்தியர்கள். அனைவருக்கும் சமமான உரிமைகள் உள்ளன. அனைவருக்கும் பொருளாதார நீதி, சமூக நீதி, அரசியல் நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் நோக்கம்” எனத் தெரிவித்தார்.