நாங்கள் தான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் : அடித்து சொல்லும் ஓபிஎஸ்..!
எடப்பாடி பழனிசாமிதான் தற்போது அதிமுகவை வழிநடத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் அனைத்திலும் பின்னடைவை சந்தித்தார். அதே சமயம் அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த ஓபிஎஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதனால் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் செயல்பட்டு வரும் ஓபிஎஸ், மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ்,தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவையே கட்சியில் சேர்த்துக்கொள்ள ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தான் தோன்றிதனமாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையெனில் தொண்டர்கள் அவரை தூக்கி எறியும் காலம் விரைவில் வரும் என்றும் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி அமைக்க யாரும் விரும்பவில்லை. கட்சியை சின்னாபின்னமாக்கிவிட்டு இப்போது கூட்டணிக்கு அழைக்கிறார்கள், எதற்காக தோற்கும் கட்சியில் சென்று சேர என்று மற்ற கட்சித் தலைவர்கள் பேசிக்கொள்கிறார்கள். ஏனெனில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அதிமுக வெற்றிபெறவே இல்லை. மக்கள் அவரை நம்பவில்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு படுதோல்வி அடையப்போகிறது. அதிமுக கொடியை நான் பயன்படுத்தக் கூடாது என்றுதான் தீர்ப்பு வந்துள்ளதே தவிர தொண்டர்கள் பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பு வரவில்லை. பாஜக கூட்டணியில்தான் நாங்கள் அங்கம் வகிக்கிறோம். பிரதமர் மோடி 10 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு தந்துள்ளார்.
மீண்டும் பிரதமராக மோடி வர செயல்படுவோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்காக தற்காலிகமாகவே இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்குதான் இரட்டை இலை சின்னம் வழங்கப்படும். நாங்கள்தான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்” என்று தெரிவித்தார்.