ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க மாட்டோம் – அகிலேஷ் யாதவ் பரபரப்பு பேச்சு
காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு முடியும் வரை, ராகுல் காந்தியின் யாத்திரையில் சமாஜ்வாடி பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு பாஜாக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. கூட்டணி, தொகுதி பங்கீடு என இந்திய அரசியல் களமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸூக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதி கேட்டுள்ளது. இதனால் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி இடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நிலவி வருகிறது. இதன் காரணமாக ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் சமாஜ்வாடி பங்கேற்காது என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 15 தொகுதிகளுக்கு மேல் வழங்க முடியாது என்றும், இதை ஏற்றுக்கொண்டால்தான் ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்துக் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.