களைகட்டும் தைப்பூச திருவிழா.. முருகன் கோயில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..

முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் தைப்பூசமும் ஒன்றாக கருதப்படுகிறது. தை மாதத்தில் பௌர்ணமி திதியும் பூச நட்சத்திரமும் ஒன்றாக இணைந்து வரும் நாள் தான் தைப்பூசம் ஆகும். முருகப் பெருமான் அசுரர்களை அழித்து தேவர்களை காக்க அன்னை பராசக்தியிடம் ஞானவேலை பெற்ற தினமே தைப்பூச நாளாக கொண்டாடுகிறோம்.

இந்த தைப்பூச நாளில் விரதமிருந்தால் கேட்ட வரத்தை முருகன் தந்தருள்வார் என்பது ஐதீகம். எனவே வாழ்வில் வெற்றியும், முன்னேற்றமும், ஞானமும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் தைப்பூச நாளில் விரதம் மேற்கொள்வது நல்லது. அதன்படி இன்று தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்கள் ஏற்கனவே தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. பக்தர்களின் வருகை அதிகரிப்பதை கருத்தில் முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தைப்பூசம் என்றாலே பழனியில் வெகு சிறப்பாக திருவிழா நடைபெறும். இதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் பழனிக்கு செல்வது வழக்கம். இதனால் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பழனிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இன்று பழனியில் திரளான பக்தர்கள் கூடியுள்ள நிலையில் அவர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது. மேலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வட பழனி மட்டுமின்றி, திருப்போரூர், சிக்கல் சிங்காரவேலர் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள முக்கியமான முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இன்று பௌர்ணமி என்பதால் திருவண்ணமலைக்கு ஏராளமான பக்தர்கல் கிரிவலம் சென்றுள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *