`BTS-ஐ காண கொரியா செல்கிறோம்..!’ – கரூரில் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமிகள்; காட்பாடியில் மீட்ட RPF
கரூரில் 8-ம் வகுப்பு படித்து வரும் மூன்று மாணவிகள், நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர்.
ஆனால், இவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. மாறாக, பள்ளி அருகே சென்று மூன்று மாணவிகளும் ஒன்றுகூடி, அதன் பிறகு வெளியே சென்று மாயமானர்கள். இது தொடர்பாக, மாணவிகளின் பெற்றோர்கள், கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, காணாமல்போன மூன்று மாணவிகளையும் கண்டுபிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து, போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், இந்த மூன்று பேரும் கரூர் ரயில் நிலையத்தில் தென்பட்டது தெரியவந்திருக்கிறது. மேலதிக விசாரணையில், மாணவிகள் மூவரும் ரயிலில் ஏறிச் சென்றது தெரிந்தது. இந்த நிலையில், மாணவிகள் மூவரையும் காட்பாடி ரயில் நிலையத்தில் வைத்து மடக்கிய ரயில்வே போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள், கரூர் ரயில் நிலையத்திலிருந்து ஈரோடு ஜங்ஷன் சென்று, அங்கிருந்து சென்னை வந்ததாக கூறியுள்ளனர்.
மேலும், சமூக வலைதளத்தில் வந்து கொண்டிருக்கும் (k pop idol) கே பாப் ஐடல் (கொரியன்) (BTS) டான்ஸ் நிகழ்ச்சியைப் பார்த்து, அதற்கு அடிமையாகி அந்த நிகழ்ச்சியைக் காண கொரியா செல்வதற்காக, தாங்கள் மூன்று பேரும் புறப்பட்டு வந்ததாக கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காட்பாடி ரயில்வே போலீஸார், மூன்று மாணவிகளையும் பிடித்து, கரூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, காட்பாடி சென்ற கரூர் போலீஸார் அந்த மூன்று மாணவிகளையும் மீட்டு வந்தனர். ‘சமூக வலைதளத்தில் பரவி வரும் இது போன்ற நிகழ்ச்சிகளை பார்க்கும் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுகிறது. இதனால், அவர்கள் தவறான முடிவை எடுக்கிறார்கள்’ என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சமூக ஆர்வலர்கள், “இது போன்ற நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதோடு, செல்போனில் என்னப் பார்க்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். இது போன்ற குழந்தைகளுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும். சமூக வலைதளங்கள் பள்ளி மாணவர்களை எப்படியெல்லாம் பாதித்து, அவர்களை இயக்கியிருக்கின்றன என்பதை பெற்றோர்கள் புரிந்துகொண்டு, தங்கள் பிள்ளைகளை கண்காணித்து வளர்க்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.