நாங்களும் புலம்பெயர்தலுக்கு எதிரானவர்கள் இல்லை… பெர்லின் திரைப்பட விழாவில் நெகிழவைக்கும் நிகழ்வுகள்
ஜேர்மனியில், ஒரு பக்கம் புலம்பெயர்தலுக்கெதிரான கருத்துக்கள் கொண்ட அரசியல் கட்சியினருக்கு ஆதரவு பெருகி வருவதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில், புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களை மொத்தமாக ஜேர்மனியிலிருந்து வெளியேற்ற திட்டமிடுவோருடன் அக்கட்சியினர் கைகோர்த்ததாக தெரியவந்ததையடுத்து, நாடே கட்சிப் பாகுபாடின்றி கொந்தளித்தது.
கொந்தளித்த ஜேர்மனி
கடந்த நவம்பரில், புலம்பெயர்தலுக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்பில் பெர்லினுக்கு வெளியே நடைபெற்ற கூட்டம் ஒன்றில், வலதுசாரிக் கட்சியான AfD கட்சியினர் சிலர், தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த சிலருடன் பங்கேற்றுள்ளனர்.
அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோர் முதல் ஜேர்மானியக் குடியுரிமை பெற்ற புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் வரை, அனைவரையும் ஜேர்மனியிலிருந்து நாடுகடத்துவது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டதாக ஊடகங்கள் சமீபத்தில் வெளியிட்ட செய்தியால் நாடே பரபரப்பானது.
அந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டத்துக்கும், கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும், அதன் பின்னணியில் இருக்கும் வலதுசாரிக் கட்சிக்கும் எதிராக மில்லியன் கணக்கான மக்கள் சாலைகளில் இறங்கி பேரணிகள் நடத்தினார்கள்.
அத்துடன், Thuringia மாகாணத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில், AfD கட்சி தோல்வியை சந்தித்தது. ஆக, புலம்பெயர்தளுக்கெதிரான கருத்துக்கள் கொண்டவர்களுக்கு ஜேர்மனியில் ஆதரவு இல்லை என்பதை ஜேர்மன் மக்கள் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.
பெர்லின் திரைப்பட விழாவிலும் எதிர்ப்பு…
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பெர்லினிலில் பெர்லின் திரைப்பட விழா துவங்கியது. விழா துவங்கிய முதல் நாளே, AfD கட்சிக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் திரைத்துரையைச் சேர்ந்த 50 பேர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள்.
அன்றைய தினமே, AfD கட்சிக்கு எதிராக, அந்நிகழ்ச்சியில் மூன்று ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. தாங்களும் இனவெறுப்புக்கும், புலம்பெயர்தலை எதிர்ப்பவர்களுக்கும் எதிரானவர்கள் என அந்த ஆர்ப்பாட்டங்கள் மூலமாக திரைத்துறையினரும் வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.