எப்படி இருந்த பங்காளி நீ! கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம்.. இப்போ எப்படி இருக்கு பாருங்க!
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில் வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் அங்கிருந்தே கிளம்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்துகள் நிலையம் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
வெளியூர் செல்வது என்றாலே அடுத்து பயணிகள் நினைவுக்கு வருவது கோயம்பேடு பேருந்து நிலையம் தான். பயணிகள் பலரும் சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து அடித்து பிடித்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கு வந்து மதுரை, திருச்சி, நெல்லை என தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பேருந்தை பிடித்து பயணிப்பார்கள். விடுமுறை காலங்களில் திருவிழா கூட்டம் போல பேருந்து நிலையம் காணப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விரைவு பேருந்துகள் செல்லும் நுழைவு வாயிலுக்கு செல்லும் சாலையின் எதிர்திசையில் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கான நிலையம் இருந்தது. சொகுசான பயணம், சரியான நேரத்திற்கு ஊருக்கு போய்விடலாம் என்பதால் கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும் பயணிகள் பலரும் ஆம்னி பேருந்துகளில் செல்ல விருப்பபப்டுகிறார்கள். இதனால் கோயம்பேடு அரசு பேருந்துகளுக்கு நிகரமாக ஆம்னி பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலைய வாசலில் இருந்தே பயணிகள் லக்கேஜ்களுடன் செல்வதை பார்க்கலாம். வண்ண வண்ண நிறங்களில் அலங்கார விளக்குகளுடன் காதை பிளக்கும் ஹார்ன் சத்தத்துடன் ஆம்னி பேருந்துகளும் வெளியே செல்வதும் வருவதும் என எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும். அதுவும் மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை வரிசையாக ஆம்னி பேருந்துகள் செல்வதை பார்க்கலாம். ஆம்னி பேருந்து நிலையத்தை சுற்றிலும் உள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டும்.