ஸ்ரீராம ஜெயம் சொன்னால் என்னென்ன நன்மைகள்..! ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால்…
ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டகசனி, அர்த்தாஷ்டம சனியால் அவதிப்படுபவர்கள் அனுமனை சரணடைய சனிதோஷம் நீங்கும்.எவர் ஒருவர் ஸ்ரீராமரையோ அல்லது ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களைக் காக்கும் பெரும் பொறுப்பை அனுமன் ஏற்பார். அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம். புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், மனோபலம் போன்றவற்றை அருளுபவர். பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர் எங்கும், எதிலும் அடங்குவதில்லை. ராமா என்ற இரண்டு எழுத்தில் மட்டும் கட்டுண்டு கிடக்கிறார். அவர் அவதரித்த நாளில் ராம நாமம் ஜெபிக்கலாம்.
வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் விரதம் இருப்பது சிறப்பானது. எல்லா நாட்களையும் விட அனுமன் ஜெயந்தியில் அவரை வேண்டி விரதம் இருப்பது சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை. அவருக்குப் பிடித்தமான உணவுகளை படைத்து வழிபடலாம்.
விரதம் இருக்கும் பக்தர்கள் மாலையில் அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வசதி இருந்தால் வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாற்றி வணங்கலாம். அனுமன் உணவுப்பிரியர். நன்றாக சாப்பிடுவார் அவருக்கு பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.
ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றினால் நம் துன்பங்கள் சூரியனைக் கண்டு உருகும் வெண்ணை போல உருகி விடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும் என்பது நம்பிக்கை. அவருக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் முடியும்.
ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி நடப்பவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும். தீய சக்திகள், காத்து கருப்பு, செய்வினை, மனநோய், சகல தோஷ தடைகள் நீங்குவதற்காக பக்தர்கள் ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்யலாம். வாஸ்து கோளாறு உள்ள வீட்டின் வாசல் படியில் அனுமன் படம் வைப்பதால் தோஷ கோளாறுகள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. அனுமனை சொல்லின் செல்வன் என சிறப்பித்துக் கூறுவார்கள். இவரை வணங்குவதன் மூலம் சிறந்த பேச்சாளராக ஆக முடியும். ஜோதிடர்களும், புரோகிதர்களும், ஆசிரியர்களும் வழிபடுவதால் நாவன்மை மேலோங்கும். அனுமன் ஜெயந்தி நாளில் அருகில் இருக்கும் ராமர் கோயில் அல்லது ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்வில் சகல நலன்களையும் பெறலாம். ஸ்ரீராம ஜெயம் என்று சொல்லுங்கள்.. ராம நாமம் ஒலிக்கும் இடங்களில் ஓடோடி வருவார் ஆஞ்சநேயர்.