2024 இல் இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? தி பாரத் லேப், லக்னோ பல்கலை. நடத்திய ஆய்வு அறிக்கை
தொழில்நுட்பம் முதல் விவசாயம் வரை, கல்வி முதல் சுகாதாரம் வரை 2024 ஆம் ஆண்டில் இந்தியர்களும், இந்தியாவும் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதனை The Bharat Lab – தி பாரத் லேப் என்ற பல்துறை வல்லுனர்கள் குழுவும், லக்னோ பல்கலைக் கழகமும் இணைந்து மேற்கொண்டு ஆய்வு முடிகளை வெளியிட்டுள்ளன. இந்த ஆய்வுகள் மூலம் இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை அறிய முடிகிறது. தி பாரத் லேப் மற்றும் லக்னோ பல்கலைக்கழகம் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் 1565 இந்திய குடிமகன்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் வேளாண்மை, தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம் மருத்துவம் என பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள்.
இந்த 2024 ஆம் ஆண்டு ஆக்கப்பூர்வமான முறையில் புதிய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஆய்வில் பங்கேற்ற 62 சதவீதம் பேர் தெரிவித்துள்ளார்கள். 35 சதவீதத்தினர் இந்த ஆண்டு பெரிய முன்னேற்றங்கள் ஏற்படாது, அதே நேரம் பின்னடைவும் ஏற்படாது என்று கருதுகின்றனர். 3 சதவீதம் பேர் மட்டுமே முந்தைய ஆண்டுகளை விட இந்த 2024 ஆம் ஆண்டு சவால் மிக்கதாக இருக்கும் என்று கூறியுள்ளார்கள்.
நாட்டின் பெருமை + தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஆகிய 3 முக்கிய சக்திகள் மன உறுதியை அளிப்பதாக ஆய்வில் பங்கேற்ற இந்தியர்கள் கருதுகின்றனர். 11% பேர் இந்திய பொருளாதாரம் குறித்து கவலை தெரிவித்துள்ளார்கள். 51% பேர் இந்த ஆண்டில் பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர். 37 சதவீதம் பேர் முன்னேற்றமும் இருக்காது பின்னடைவும் இருக்காது என்று கூறியுள்ளனர்.
AI + தேர்தல்
2024 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் தேர்தல் ஆகிய இரண்டும் தான் அதிகம் பேசப்படும் தலைப்புகளாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 42 சதவீதம் பேர் இந்த 2024 ஆம் ஆண்டில் தங்களது வாழ்க்கை முறை முன்னேற்றம் அடையும் என்று கூறியுள்ளனர். பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளும் இதில் முக்கியத்துவம் பெற்றன. 33 சதவீதம் பேர் பருவநிலை மாற்றம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறியுள்ளார்கள்.
பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை
சிறு குறு தொழில் செய்யும் வர்த்தகர்கள் 29 சதவீதத்தினர் எதிர்மறையான மனநிலையை வெளிப்படுத்தி உள்ளனர். 37 சதவீதத்தினர் நடப்பு ஆண்டில் தங்களது தொழில் முன்னேற்றம் அடையும் என்று கூறியுள்ளார்கள். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 81 சதவீதம் பேர் தங்களது வாழ்வில் ஆக்கபூர்வமான முன்னேற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளார்கள். அவர்களில் 79% தங்களுடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் முக்கிய திருப்புங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நிலைமை
தொழில்நுட்பம் மற்றும் கேட்ஜெட் துறைகளில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் தங்களது திறமையை வெளிப்படுத்தி கவனம் பெற்று வருகின்றனர். தொழில்நுட்பம் மற்றும் கேட்ஜெட் துறையில் பெண் பணியாளர்களின் சதவீதம் 66 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமணம் முடித்த பணியாளர்கள் 58 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில் இருப்பதாகவும், 39 சதவீதத்தினர் தங்களது பொருளாதாரம் திருப்திகரமாக இல்லை என்றும் கூறியுள்ளார்கள்.
திருமணம் முடிக்காத பணியாளர்கள் 56 சதவீதம் பேர் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை ஆக்கப்பூர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். திருமணம் முடித்த பணியாளர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை 66 சதவீதம் பேர் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை முன்னேற்றம் கண்டிருப்பதாக கூறியுள்ளார்கள்.
இந்தியர்களின் ஆர்வம்
இந்த தரவுகள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் அனைத்தும் இன்றைய இந்தியா தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு, சுயமாக தொழில் தொடங்குதல், பொருளாதார வாய்ப்புகளை பெறுதல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருப்பதை காட்டுவதாக ஆய்வு குழு தலைவர் அலோக் ராய் கூறியுள்ளார்.
நிதி, தொழில்நுட்பம், போக்குவரத்து, ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சி இருக்கும் என்பதை ஆய்வு அறிக்கை தெரியப்படுத்துவதாக ஆய்வு குழு துணை தலைவர் சந்தீப் கோயல் கூறியுள்ளார்
ஆண்களைவிட பெண்கள் தொழில்நுட்பத் துறையில் ஆர்வம் காட்டுவது நல்ல அறிகுறி என்று குறிப்பிட்டுள்ள லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர் சங்கீதா, எண்ண முடியாத மொபைல்கள், லேப்டாப் தொழில்நுட்ப தயாரிப்புகள் பெருகி உள்ள நிலையில், மகளிர் இந்த துறையில் முன்னோடியாக இருப்பது வியப்பை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.