பஜாஜ் பல்சர் அறிமுகம் செய்த புது மாடல்கள்.. லுக் மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?
எத்தனையோ பைக்குகள் இந்திய சந்தையில் அறிமுகமானாலும் பல்சர் பைக்கின் மவுசு ஒருபோதும் இளைஞர்களிடத்தில் குறையாது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இளைஞர்களின் விருப்பத்திற்குரிய பைக்காக இருந்துவரும் பஜாஜ் பல்சர் N150 மற்றும் N160 பல புதிய அம்சங்களுடன் 2024-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெர்ஃபார்மன்ஸிலும் பைக்கின் பழைய வடிவமைப்பிலும் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் தற்போதைய நவீன காலத்திற்கேற்ற பல தொழில்நுட்ப வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு பைக்குகளுக்கும் இரண்டு மாடல்கள் உள்ளது. பல்சர் N150 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.18 லட்சமாகும். அதுவே பல்சர் N160 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.30 லட்சமாகும்.
இரண்டு பைக்குகளின் பேசிக் மாடல்களில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும், இதன் உச்சபட்ச மாடலில் முழுமையான புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் போன்ற பல குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனினும் பல்சர் பைக்கின் டிசைன், திறன் ஆகியவற்றில் எந்த குறைபாடும் வைக்கவில்லை பஜாஜ்.
புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மூலம் நீங்கள் அந்த சமயத்தின் எரிபொருள் திறன், சராசரி எரிபொருள் மைலேஜ், இன்னும் எத்தனை கி.மீ வரை பைக் செல்லும் போன்ற அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் ப்ளூடூத் மூலமாக பஜாஜ் ரைடு கனெக்ட் செயலியை (Bajaj Ride Connect app) இணைத்துக்கொள்ளும் வசதி உள்ளது. இதன் மூலம் பைக் ஓட்டிக் கொண்டிருக்கும் போதே நமக்கு வரும் போன் அழைப்புகளை பேசலாம், மெசேஜ்களை தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி புதிய பல்சர் N150 பைக்கில் பின்பக்க டிஸ்க் பிரேக்குடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் (ABS) வசதி உள்ளது.
இஞ்சின் பவர்:
பல்சரின் இஞ்சின் பவரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆகையால் இளைஞர்கள் விரும்பக்கூடிய பவரும் சீற்றமும் இம்மியளவு கூட புதிய பல்சரில் குறையவில்லை. பல்சர் N150 பைக் 149.5சிசி, சிங்கிள் சிலிண்டன் இஞ்சினுடன் அதிகப்பட்சமாக 14.5 hp பவர் மற்றும் 13.5 Nm இழுவிசையை கொண்டுள்ளது. அதேப்போல் பல்சர் N160 பைக் அதே 165சிசி இஞ்சினுடன் அதிகப்பட்சமாக 17 hp பவர் மற்றும் 14.3 Nm இழுவிசையை கொண்டுள்ளது.
புதிய பஜாஜ் பல்சர் N150, N160 விலை:
2024-ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டு பல்சர் பைக்குளும் இரண்டு மாடல்களில் வருகிறது. பல்சர் N150 பைக் ரூ.1.18 லட்சம் மற்றும் ரூ.1.24 லட்சத்தில் கிடைக்கிறது. அதேப்போல் பஜாஜ் N160 பைக்கின் இரண்டு மாடல்களும் முறையே ரூ.1.31 லட்சம் மற்றும் ரூ.1.33 லட்சத்தில் கிடைக்கிறது.