மாசி மாதத்தில் செய்ய வேண்டியவைகள் என்னென்ன?

எல்லா தெய்வங்களுக்கும் சிறப்பு மிக்க மாதம் என்று போற்றப்படுகிறது மாசி மாதம். திருமால், மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்கிறது புராணம். மாசி மாதத்தில் வருகிற சங்கடஹர சதுர்த்தி மிக மிக விசேஷம்…. ஆழ்வார்களில் ஒருவரான, குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் அவதரித்தார்.

மாசி மாதம் என்பது மன வலிமை தரக்கூடிய மாதம் மகத்துவம் நிறைந்த மாதம். இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர். சிவத்தோடு சக்தி இணைந்து முழுமை பெறுவதால் தன் கணவனின் நலனுக்காக பெண்கள் இந்த மாசி மாதத்தில் தாலிக் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மாசி மாதத்தன்றுதான் பார்வதிதேவி காளிந்தி நதியில்… தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள் என்கிறது புராணம். சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் ஏராளம். இப்படியான திருவிளையாடல்கள் பலவற்றை நிகழ்த்தியது மாசிமாதத்தில்தான். எனவே மாசி மாதம் முழுவதுமே சிவ வழிபாட்டுக்கு உரிய மாதம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம்தான். எனவே, மாசி மாதத்தில் நம்மால் முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்வது விசேஷம். அது மும்மடங்கு பலன்களைத் தரும்.

அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா என்கிறோம். மாசி மாத பூச நட்சத்திர தினத்தில்தான் முருகப்பெருமான் சுவாமிமலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார். மாதந்தோறும் வருகிற ஏகாதசியே சிறப்புமிக்கதுதான். ஆனால் மாசி மாதத்தில் வருகிற ஏகாதசியில் விரதம் இருப்பது மகாபுண்ணியம். உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம். அந்தத் துறைகளில், எடுத்துக்கொண்ட கல்வியில் மிகப்பெரிய உச்சம் தொடலாம் என்பது நம்பிக்கை.

மகாபிரளய காலத்தில் கும்பத்திலிருந்து அமிர்தம் பரவி உலகம் மீண்டும் உருக்கொண்ட தினம் மாசி மகம். வருணதேவன் தன்னைப் பீடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட்டு அருள்பெற்ற தினம் மாசி மகம். அம்பிகை ஒரு சங்காக அவதரித்து தாட்சாயணியாக மாறியதும் மாசி மகத்தில்தான். முருகனுக்குரிய வழிபாட்டு தினங்களில் மாசி மகம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் தவறாமல் சிவாலயம் சென்று வழிபடுவதன் மூலம் இன்னல்கள் நீங்கப்பெறலாம் என்பது நம்பிக்கை.

பௌர்ணமி வழிபாடு அம்பிகைக்கு உரியது. மாசி மாதப் பௌர்ணமி தினம் சிவ வழிபாட்டுக்கும் முன்னோர் வழிபாட்டுக்கும் உரியது. அண்ணாமலையாரே வள்ளாலன் என்ற தன் பக்தனுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தது மாசி மாதப் பௌர்ணமி தினத்தில்தான். எனவேதான் வழக்கமாக அமாவாசைகளில் செய்யும் சிரார்த்த காரியங்களை இன்று செய்வது விசேஷம் என்று சொல்லப்படுகிறது.

இந்த நாளில்தான் ஹோலிப் பண்டிகை வருகிறது. கிருஷ்ணன், ராதையுடன் வண்ணப்பொடிகள் தூவி விளையாடிய தினம் இது என்பதால் இந்தப் பண்டிகை மிகவும் முக்கியமானதாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தவறாது இறைவழிபாடு செய்து நன்மைகளைப் பெறலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *