ஆஸ்திரேலிய வீரர் செய்த செயல்.. 1 ரன் கூட கொடுக்காத அம்பயர்.. கடுப்பான நியூசிலாந்து கேப்டன்
வெல்லிங்டன் : நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரான் கிரீன் சிறப்பாக ஆடி தனி ஆளாக 174 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணி பெரிய ஸ்கோர் சேர்க்க காரணமாக இருந்தார்.
அவருடன் சேர்ந்து 10வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்க்க காரணமாக இருந்தார் ஜோஷ் ஹேசல்வுட். இந்தக் கூட்டணியில் ஹேசல்வுட் 22 ரன்கள் மட்டுமே எடுக்க கிரீன் 91 ரன்கள் சேர்த்தார். இந்த அபாரமான ஆட்டத்துக்கு இடையே வேடிக்கையான சம்பவம் ஒன்று நடந்தது. இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி ரன் ஓடிய போதும் அம்பயர் ரன் கொடுக்கவில்லை. மேலும், நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி அவர்களின் செயலால் எரிச்சல் அடைந்து அம்பயரிடம் அது சரியான செயல் தானா என விளக்கம் கேட்டார்.
9 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டி கவனமாக ஆடிய கிரீன் இருவரின் விக்கெட்டையும் எக்காரணத்தை கொண்டும் இழந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். மேலும், ஒவ்வொரு ஓவரின் இறுதியில் ஒரு ரன் ஓடி அடுத்த ஓவரிலும் தானே பேட்டிங் ஸ்ட்ரைக்கை வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் முயன்றார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில் ஹேசல்வுட் பந்தை தட்டி விட்டு ரன் ஓடி வர முயன்றார். எதிர்முனையில் இருந்த கிரீன் ரன் அவுட் ஆகி விடக் கூடாது என்பதால் கவனமாக பந்தை பார்த்துக் கொண்டே நின்றார், அதே சமயம், இரண்டு ரன் ஓடினால் மட்டுமே அடுத்த ஓவரில் தான் பேட்டிங் ஸ்ட்ரைக்கை வைத்துக் கொள்ள முடியும் என்பதிலும் குறியாக இருந்தார்.
அதனால், பந்து ஃபீல்டரை கடந்து சென்றதை உறுதி செய்த உடன் இருவரும் ரன் ஓடினர். ஆனால், பாதி தூரத்தை இருவரும் கடந்த பின்னர் திடீரென கிரீன், ஹேசல்வுட்டை மீண்டும் திரும்பி ஓடுமாறு கூறினார். அப்போது தான் அடுத்த ஓவரில் தான் முதல் பந்தில் இருந்தே பேட்டிங் செய்ய முடியும் என்பதால் அவர் அப்படி செய்தார். அதனால், இருவருமே ஒரு ரன் எடுக்க இன்னும் சில அடிகள் இருந்த போது மீண்டும் திரும்பி ஓடி வந்தனர்.
இரண்டு பேட்ஸ்மேன்களும் கிரீஸை தொட்டால் மட்டுமே ஒரு ரன் கொடுக்கப்படும். ஆனால், இங்கே இருவருமே கிரீஸை தொடவில்லை. ஆனால், அதிக தூரம் ஓடி விட்டு மீண்டும் தங்கள் இடத்துக்கே திரும்ப வந்து விட்டனர். இது போட்டியில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதில் ஏதேனும் விதிமீறல் இருக்கிறதா என அம்பயர்கள் தங்களுக்குள் விவாதித்தனர். அப்போது நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். எனினும், விதிப்படி இதில் எந்த தவறும் இல்லை என்பதால் போட்டி தொடர்ந்தது.