40 வயதிற்கு பின் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள்.. தவிர்க்க என்ன செய்யலாம்..?

வயது அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய உடல் உறுப்புகள் பலவீனமடைய துவங்குவது பொதுவானது. எனவே ஒருவர் தனது சிறு வயதிலிருந்தே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது எப்போதுமே ஆரோக்கியத்தை தக்கவைத்து கொள்ள உதவுகிறது.

குறிப்பாக ஒருவர் தனது 40 வயதை எட்டுவது என்பது உடல் தேவைகளின் மாற்றங்களின் அடிப்படையில் அவரது வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. வளர்சிதையில் மாற்றங்கள் மற்றும் ஹார்மோன்களில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படுவதால், ஒருவர் தனது 40-களில் சரியான ஊட்டச்சத்துகளை பெறுவதை உறுதி செய்வது மிகவும் முக்கியமாகிறது.

யசோதா மருத்துவமனை, ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ஸ்ரீ கரன் உத்தேஷ் தனுகுலா ஒருவர் தனது 40-களில் எந்தெந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் மற்றும் இந்த வயதில் எற்படுவத்ற்கு சாத்தியமுள்ள குறைபாடுகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பொதுவான குறைபாடுகள்:

40-களில் இருக்கும் ஆண்களை பொறுத்த வரை டெஸ்டோஸ்டிரோன் லெவல்களில் வீழ்ச்சியை எதிர்கொள்ள கூடும். இது muscle mass குறைவு, லிபிடோ குறைவு மற்றும் மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்கிறார் கரன் உத்தேஷ். கூடுதலாக இந்த வயதுகளில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற இதய ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயங்களை சந்திக்க நேரிடலாம். மறுபுறம் 40-களில் இருக்கும் பெண்களை எடுத்து கொண்டால் பெரும்பாலும் பெரிமெனோபாஸ் ( perimenopause) உடன் தொடர்புடைய ஹார்மோன் மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். இதன் விளைவாக ஹாட் ஃப்ளாஷஸ், மனநிலை மாற்றங்கள் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற அறிகுறிகளை எதிர்கொள்ள நேரிடும் என்கிறார் டாக்டர் தனுகுலா.

இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய பன்முக அணுகுமுறை தேவைப்படுவதாக கூறுகிறார் டாக்டர் தனுகுலா :

பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்த்து கொள்ள முன்னுரிமை கொடுக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை டயட்டில் சேர்க்க வேண்டும். உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒரு நபரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் வருக்கு இருக்கும் உடல் நிலைகளை பொறுத்து டயட்டில் குறிப்பிட்ட வைட்டமின்ஸ்களான டி, பி12 மற்றும் கால்சியம், மெக்னீசியம் போன்ற மினரல்ஸ்காலை சப்ளிமென்ட்ஸ்களாக சேர்த்து கொள்ளலாம். அதே போல் டெஸ்டோஸ்டிரோன் குறைபாடுகளை எதிர்கொள்ளும் ஆண்கள் ஹார்மோன் மாற்று சிகிச்சை பற்றி நிபுணரிடம் கலந்தாலோசிக்கலாம்.

தினசரி உடற்பயிற்சி, மன அழுத்த மேலாண்மை, தினசரி போதுமான தூக்கம், புகை மற்றும் மது பழக்கத்தை தவிர்ப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைக்க உதவுவதோடு மற்றும் குறிப்பிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உதவும்.

40-களில் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கீழே…

வலுவான எலும்புகளை பராமரிக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி இரண்டும் முக்கியமானது. குறிப்பாக பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் நிலை ஏற்படுவதை தடுக்க இவை முக்கியம்.

பி வைட்டமின்ஸ்களான B12, B6 மற்றும் ஃபோலேட் ஆகியவை ஆற்றல் வளர்சிதை மாற்றம், மூளை ஆரோக்கியம் மற்றும் டிஎன்ஏ தொகுப்பு உள்ளிட்டவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதய ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை ஊக்குவித்து அழற்சியை குறைக்க ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உதவும் . எப்பித்தும் நம் உடலுக்கு தேவைப்படும் அத்தியாவசிய கொழுப்புகளாக இவை இருக்கின்றன.

வயதுக்கு ஏற்ப இயற்கையாகவே muscle mass குறையும். எனவே தசை பராமரிப்பு மற்றும் இது சார்ந்த பிரச்சனைகளை நிவர்த்தி செய்து கொள்ள ஒருவர் தனது 40-களில் போதுமான அளவு ப்ரோட்டீன் எடுத்து கொள்ள வேண்டியது அவசியம்.

தசை மற்றும் நரம்பு செயல்பாடுகள், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு மெக்னீசியம் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

செலினியத்துடன் சேர்ந்து வைட்டமின் சி, வைட்டமின் ஈ உள்ளிட்டவை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்ஸை எதிர்த்து போராடவும், நோயெதிர்ப்பு அமைப்பை வலுவாக வைக்கவும் உதவுகின்றன. சரிவிகித உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை உள்ளிட்டவை உங்களின் 40-களில் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க முக்கியமானவை. கூடவே வழக்கமான பரிசோதனைகள் மற்றும் சுகாதார நிபுணர்களுடனான கலந்தாலோசனைகளும் அவசியம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *