கடந்த ஆண்டு இதே ஆளுநர் என்ன செய்தார்? நாம் எழுதிக் கொடுத்த உரையில்…
ராமநாதபுரத்தில் நடைபெற்ற ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி கூறியதாவது :
தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும். எங்களுக்கு தேசிய கீதமும் முக்கியம், எங்களுடைய தமிழ்த்தாய் வாழ்த்தும் முக்கியம்.இந்த நிகழ்ச்சியையும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடித்தான் ஆரம்பித்துள்ளோம். அரசு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி கழக நிகழ்ச்சிகளும் இனி தமிழ்த்தாய் வாழ்த்தோடுதான் ஆரம்பிக்கப்படும்.
அரசு என்ன எழுதிக் கொடுக்கிறதோ அதை படிப்பது தான் படிக்க ஆளுநரின் பொறுப்பு. அவர் ஒன்றும் மக்கள் பிரதிநிதி கிடையாது அவர் யாராலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல.குடியரசுத் தலைவர் கூட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் ஆளுநர் என்பவர் நியமிக்கப்பட்டவர்.
இதே ஆளுநர் கடந்த ஆண்டு என்ன செய்தார்? நாம் எழுதிக் கொடுத்த உரையில் இருந்த பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை தவிர்த்து விட்டார்.அதன் பிறகு தமிழ்நாட்டின் பெயரை தமிழகம் என்று மாற்ற வேண்டும் என்றார். ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு இரண்டே நாளில் பல்டி அடித்து மன்னிப்புக் கோரினார்.
இன்னும் 10 நாட்களில் தேர்தல் தேதியை அறிவித்து விடுவார்கள். நமக்குள் இருக்கும் மனக்கசப்புகளை எல்லாம் தள்ளிவைத்து விட்டு வெற்றியை தருவீர்கள் என்று நம்புகிறேன் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏதேதோ தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடுகளால் அடிக்கடி முட்டிக்கொள்ளும் ஆளுநருக்கும் அரசுக்கும் இருக்கும் இந்த பிரச்சனை எப்போது தான் முடிவுக்கு வரப்போகிறது என்று தெரியவில்லை.