இன்று காலை கிளாம்பாக்கத்தில் நடந்தது என்ன.. ஊரப்பாக்கம் முதல் வண்டலூர் வரை தீர்வு தான் என்ன?
சென்னை: இன்று காலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வழியாக சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பிய போது கண்ட காட்சிகளை இப்போது பார்ப்போம்.
ஊரப்பாக்கம் சிக்னல் முதல் வண்டலூர் மேம்பாலம் வரை என்ன தீர்வு வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வேண்டிய வசதிகள் என்ன என்பதை பற்றியும் பார்ப்போம்.
இந்த செய்தியை எழுதும் நான் கண்ட காட்சிகளை செய்திகளாக விவரிக்கிறேன்.. பலரும் நேற்று மாலை சென்னை கோயம்பேட்டில் நடந்த தகவல்களை அறிந்திருப்பார்கள். சொந்த ஊரில் இருந்து நேற்று மாலை கிளம்பி இன்று காலை சென்னை வர திட்டமிட்டேன்.. நேற்று மாலையே செய்திகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். முதலில் கிளாம்பாக்கம் போய் ஏற வேண்டும் என்றார்கள். அதன்பின்னர் கோயம்பேட்டில் ஏற்றினார்கள். போலீசார் பாதுகாப்பு, வாக்குவாதம், பேட்டி என கோயம்பேட்டில் நேற்று நிலைமையை பார்த்த போது, விடிந்தால் கண்டிப்பாக ஆம்னி பேருந்துகளை உள்ளே விடமாட்டார்கள் என்பதை அறிந்தேன். எனினும் தாம்பரம் வரை செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து ஏறினேன்.
பேருந்தில் வந்த அம்மா, கிளம்பாக்கம் வந்த உடன் சொல்லு தம்பி என்றார். மேலும் தாம்பரம் போகுமா, தாம்பரம் போகாதா என்று டிரைவரை கேட்டபடியே இருந்தார். ஆனால் முதலில் எந்த பதிலும் கூறவில்லை.. பேருந்து செங்கல்பட்டை கடந்து பரனூர் சுங்கச்சாவடி வந்த போது தான் வண்டலூரை வண்டி தாண்டாது என்றார் டிரைவர். அப்போது டிரைவரிடம் ஓடிப்போய் நின்ற ஒரு இளைஞர், பொத்தேரியில இறங்கிவிடுங்கள் என்றார். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் எதிரே உள்ள பெத்தேரி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டால் எளிதாக போய்விடுவேன் என்று கூறினார். இதையடுத்து அவரிடம் இறக்கிவிடுவதாக டிரைவர் கூறினார். அதன்படியே டிரைவர் இறக்கிவிட்டார்.அப்போதே அவர் பயணிகளிடம் ரயிலில் தாம்பரம், கிண்டி, திநகர், கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம்,எக்மோர், சென்டரல், கடற்கரை, உள்ளிட்ட வழித்தடங்களில் போறவங்க இதுல இறங்கிங்க என்று கேட்டார். அப்போது அவருடன் பாதி பேர் இறங்கினார்கள். மீதிப்பேர் வேளச்சேரி, பள்ளிக்கரணை மேடவாக்கம், கோயம்பேடு, வடபழனி, பூந்தமல்லி சைடு போகிறவர்கள் என்பது தெரிந்தது.
பேருந்து ஊரப்பாக்கத்தை கடந்த உடன், கிளாம்பாக்கம் டவுன் பேருந்து நிலையத்தின் எதிரே இறக்கிவிட்டார்கள். அங்கு சரியான கூட்டம் இருந்தது. அனைவருமே ஆம்னி பேருந்தில் இறங்கியவர்கள் என்பது தெரிந்தது. அங்கு பல டவுன் பேருந்துகள் நின்று ஆட்களை ஏற்ற முடியாத அளவிற்கு நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் சாலையை ஆபத்தான முறையில் கடந்து சென்று டவுன் பேருந்துகளில் மக்கள் ஏறினார்கள். நிறைய டவுன் பேருந்துகள் விடப்பட்டிருந்தால், பயணிகள் போக வேண்டிய இடத்திற்கு போவதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. பேருந்து நிலையத்தில் பெரிய அளவில் கூட்ட நெரிசல் இல்லை. மக்கள் எளிதாக பேருந்துகளில் ஏறி பயணத்தை தொடர்ந்தார்கள்.