பெங்களூரில் கொரோனா நேரத்தில் நடந்தது அப்படியே நடக்கிறது.. வொர்க் பிரம் ஹோம், ஆன்லைன் கிளாஸ்..!
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்கும் வகையில் மழைக்காலம் வரும் வரையில் வொர்க் பிரம் ஹோம் வசதியையும் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் எடுக்கவும் மாநில அரசுக்கு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக பெங்களூரு நகர மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். நிலைமையைச் சமாளிக்க முடியாமல் கார்ப்பொரேஷன் அதிகாரிகளும் திணறி வருகின்றனர். இந்த நிலையில் கோடை வெயில் இப்போதே கொளுத்தி எடுக்கத் தொடங்கி விட்டது.
இந்த நிலைமையில் தண்ணீர் பிரச்சனை சமாளிக்க, தண்ணீரை சேமிப்பதற்காக வொர்க் பிரம் ஹோம் வசதியையும் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கவும் கோரிக்கை வலுத்துள்ளது.
இதனிடையே முதல்வர் சித்தராமையாவுக்கு ஐடி நிறுவனங்களில் வொர்க் பிரம் ஹோம் வசதியை கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமூக தளங்கள் மூலம் கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
கோவிட் 19 காலத்தின்போது ஆன்லைன் மூலம் பணியாற்றியதன் மூலம் தண்ணீர் பிரச்னை ஏற்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
2023 ஆம் ஆண்டில் பருவமழை பொய்த்ததால் கர்நாடகத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
எல் நினோ காரணமாக பருவமழை சரியாகப் பெய்யவில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எல் நினோ காரணமாக கடந்த ஆண்டு பருவமழை பொய்த்தது. இந்த ஆண்டும் மழை குறைவாகத் தான் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பிரசாத் கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் கோடைக்காலம் மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதால் கர்நாடகத்தில் 7082 கிராமங்களும் பெங்களூருவிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு எதிர்வரும் சில மாதங்களில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே பெங்களூருவில் வற்றி வரும் ஏரிகளில் 1300 மில்லியன் லிட்டர் தண்ணீரை தினமும் நிரப்புவதற்கு கார்ப்பொரேஷன் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் நகரில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதைத் தடுக்கலாம் என்கின்றனர். ஏற்கெனவே நகரில் உள்ள 50 சதவீத போர்கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வற்றிப்போய் விட்டன.
மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளதால் பெங்களூருக்கு தரப்படும் காவிரி நீர் அளவு போதும் அளவுக்கு இருக்காது என்று பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரிய அதிகாரிகள் கூறினர்.
ஜூலை மாதம் வரை பெங்களூருவுக்கு குடிநீர் வழங்குவதற்குப் போதிய தண்ணீர் ஆதாரம் இருப்பதாக குடிநீர் வழங்கல் வாரியத் தலைவர் ராம்பிரசாத் கூறியுள்ளார்.
காவிரி நதி நீர் திட்டத்தின் 5ஆவது கட்டப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் 200 ஆழ்துளை கிணறுகளை அமைப்பதற்கு வாரியம் திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் நகரத்தில் இணைக்கப்பட்ட 110 கிராமங்களுக்கு 40,000 தண்ணீர் இணைப்புகளுக்கு மட்டுமே குடிநீர் வழங்க முடியும் என்று வாரியம் கூறியுள்ளது. இந்த முக்கியமான சிக்கலைத் தீர்க்க, வாரியம் 79 டேங்கர்களைத் திரட்டி, தேவைப்படும் பகுதிகளுக்கு இலவச தண்ணீரை வழங்கியுள்ளது.