இளவரசி கேட்டுக்கு என்ன ஆயிற்று? மௌனம் காக்கும் அரண்மனை வட்டாரம்

பிரித்தானிய இளவரசி கேட்டுக்கு என்ன ஆயிற்று என்பதை அறிந்துகொள்ள மக்கள் துடிக்கும் நிலையில், அரண்மனை வட்டாரமோ மௌனம் காப்பதால், மக்கள் தாங்களாகவே இளவரசிக்கு என்ன ஆயிற்று என்பது தொடர்பில் கருத்துக்களை வெளியிடத் துவங்கியுள்ளார்கள்.

மன்னர் சார்லஸ் குறித்து வெளியான தகவல்கள்
மன்னர் சார்லசுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டபோது, அவருக்கு புற்றுநோய் தாக்கியுள்ளது குறித்து அரண்மனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

வெறுமனே மன்னருக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறினால் மக்கள் குழப்பம் அடைவார்கள், தேவையில்லாமல் சந்தேகங்கள் எழலாம் என்பதை முன்கூட்டியே கருத்தில் கொண்டே மன்னர், தனக்கு புற்றுநோய் என்பதை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் வெளியானதுடன், அவ்வப்போது அவர் வெளியேயும் தலைகாட்டிவருகிறார்.

இளவரசி கேட்டின் நிலை
ஆனால், இளவரசி கேட் குறித்து எந்த விளக்கமான அறிக்கையும் வெளியாகவில்லை. அவருக்கு வயிற்றுப்பகுதியில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்ற தகவலுடன், அவர் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார், ஈஸ்டர் பண்டிகை வரை அவர் அரசுப்பணிகளுக்குத் திரும்ப வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டது. அதற்குப் பின் இளவரசி கேட் குறித்து எந்த தகவலும் இல்லை.

பொதுவாகவே, பிரித்தானிய மக்களுக்கு இளவரசி கேட்டை மிகவும் பிடிக்கும். அவரைக் குறித்த செய்திகளும், அவரது புகைப்படங்கள் வெளியாகாத நாட்களும் குறைவே எனலாம்.

அப்படியிருக்கும் நிலையில், இளவரசி கேட் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பி ஓய்வெடுத்துவருகிறார் என தகவல் வெளியானதே தவிர, அவரது ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை.

அதனால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளதுடன், பொதுமக்களுக்கு அவரது உடல் நிலை குறித்து சந்தேகமும் உருவாகியுள்ளது.

திடீரென நிகழ்ச்சிகளை ரத்து செய்த இளவரசர் வில்லியம்
இப்படிப்பட்ட ஒரு சூழலில், தனது ஞானத்தந்தையான கிரீஸ் மன்னர் King Constantineஉடைய நினைவஞ்சலி நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியம் கலந்துகொள்ளமாட்டார் என திடீரென ஒரு அறிவிப்பு வெளியானது.

அதுவும், நிகழ்ச்சி துவங்க ஒரு மணி நேரமே இருந்த நிலையில், தனிப்பட்ட காரணம் நிமித்தமாக அந்த நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியம் கலந்துகொள்ள மாட்டார் என திடீரென அறிவிக்கப்பட்டதால் மக்களுடைய சந்தேகம் அதிகரித்தது.

ஒருவேளை இளவரசி கேட்டின் உடல் நிலை மோசமாகிவிட்டதோ, அதனால்தான் இவ்வளவு முக்கியமான நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை ரத்துசெய்துவிட்டு வில்லியம் செல்கிறாரோ என மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

ஆனாலும், இன்னமும் அரண்மனை வட்டாரம், இளவரசி கேட்டின் உடல்நிலை முன்னேற்றமடைந்து வருகிறது என்ற ஒரு அறிவிப்பு தவிர்த்து வேறு விளக்கம் எதையும் அளிக்கவில்லை.

விடயம் என்னவென்றால், இந்த பிரச்சினை இதோடு முடிந்துவிடப்போவதில்லை. இளவரசி உடல் நலம் தேறி பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போதும், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பத்தான் போகிறார்கள். அப்போது அவர் என்ன சொல்லப்போகிறாரோ தெரியவில்லை!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *