விராட் கோலி இல்லைனா என்ன.. பேட்டிங் பயிற்சியை தொடங்கிய குட்டி கோலி.. அப்போ சர்பராஸ் கான் வாய்ப்பு?
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் என்சிஏவில் மீண்டும் பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளதாக வீடியோ வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ள நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி சொந்த காரணங்களால் மொத்தமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவரது இடத்தை நிரப்ப போவதுப் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
ஏனென்றால் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி களமிறங்கும் நம்பர் 4 வரிசையில் கேஎல் ராகுல் களமிறங்கினார். இதன்பின் வலது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து கேஎல் ராகுல் விலகினார். இதனைத் தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறக்கப்பட்டார்.
ஆனால் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் கேஎல் ராகுல் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு முழு ஃபிட்னஸை எட்டினால் மட்டுமே களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜத் பட்டிதர் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் 4 மற்றும் 5 ஆகிய பேட்டிங் வரிசையில் களமிறங்குவார்கள் என்று பார்க்கப்படுகிறது.
2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரஜத் பட்டிதர் கொஞ்சம் ரஹானேவின் ஸ்டைலில் ஆடியதோடு, ஸ்பின்னர்களை சிறப்பாகவே எதிர்கொண்டார். இதனால் அவருக்கு அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் என்சிஏவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த சீனியர் வீரரான கேஎல் ராகுல் பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளார்.
இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உறுதி செய்துள்ளார். இதனால் ராஜ்கோட்டில் நடக்கவுள்ள 3வது டெஸ்டில் கேஎல் ராகுல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேஎல் ராகுல், ஒரு சதம் மற்றும் 9 அரைசதங்கள் என்று மொத்தமாக 1031 ரன்களை விளாசியுள்ளார்.
அதிலும் கம்பேக் போட்டியிலேயே தென்னாப்பிரிக்கா மண்ணில் கேஎல் ராகுல் சதம் விளாசியதோடு, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 86 ரன்களும் விளாசினார். இந்திய அணியில் விராட் கோலிக்கு பின் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதற்கான சிறந்த டெக்னிக் கேஎல் ராகுலிடம் மட்டுமே உள்ளது. இதனால் இவர் ஃபிட்னஸை எட்டினால், நிச்சயம் இந்திய அணியின் பிரச்சனைகள் குறையும் என்று பார்க்கப்படுகிறது.