ஒயிட் பேப்பர் என்றால் என்ன? மத்திய அரசு வெள்ளை அறிக்கையின் வரலாறும் பின்னணியும்

நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடந்த பொருளாதார முறைகேடு குறித்து, மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்திற்குத் தீங்கு விளைவித்த நடவடிக்கைகள் பற்றி வெள்ளை அறிக்கை விவரிக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதன் நன்மைகள் பற்றியும் அந்த வெள்ளை அறிக்கையில் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சியின் சாதனைகளும் பட்டியலிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர் நீட்டிப்பு:

மாநிலங்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடியும் பதில் அளிக்கவுள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து 56 பேர் ஓய்வுபெற உள்ளதால் அவர்களுக்குப் பிரியாவிடை வழங்குவதற்காக இந்தக் கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தேர்தலுக்கு முந்திய கடைசி கூட்டத்தொடராக இருப்பதால், இந்தக் கூட்டத்தொடரில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, அண்மையில் ஒரு செய்தி சேனலுக்குப் பேட்டி அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசு விரைவில் ஒரு வெள்ளை அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க விரும்புகிறது என்று கூறினார்.

அதில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் எடுக்கப்பட்ட தவறான நடவடிக்கைகள் மற்றும் முறைகேடுகளால் ஏற்பட்ட பாதகமான விளைவுகள் குறித்து விவரிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அற்புதமான பத்து ஆண்டுகளை நாம் இழந்துவிட்டதாகத் தெரிவித்த அமைச்சர் நிர்மலா, “சுரங்கங்கள் முதல் வங்கிகள் வரை பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையையும் பிரச்சனைகள் பாதித்தன” என்றும் கூறினார்.

வெள்ளை அறிக்கை:

அரசு மற்றும் நிறுவனங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்பதற்காகவே மத்திய அரசு வெள்ளை அறிக்கையை முன்கூட்டியே வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். “எனவே, பிரதமர் மோடி முதலில் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுப்பதில் ஈடுபட்டார். அதனால்தான் வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை. பிரதமர் ஒருபோதும் திடீர் திருப்பங்கள் மூலம் ஆதாயம் தேடுபவர் இல்லை” என்றும் கூறினார்.

பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் பேசிய நிர்மலா சீதாராமன், 2014 வரை நாடு எந்த நிலையில் இருந்தது, இப்போது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை வெள்ளை அறிக்கை தெளிவாகக் காட்டும் என்றும் கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *