யூடியூப்பில் உள்ள ஆம்பியன்ட் மோட் என்றால் என்ன..? விளக்கம் இதோ
யூடியூப் பெரும்பாலான மக்களின் ஒரு பொழுதுபோக்கு தளமாக இருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பல மணி நேரங்கள் யூடியூப்பில் வீடியோக்களை பார்ப்பதை பலர் இன்று வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் யூடியூப் இன்று மக்களோடு ஒன்றிணைந்து விட்டது.
பலருக்கு பொழுதுபோக்காக அமையும் இந்த யூடியூப்பில் யூசர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக அவ்வப்போது பல்வேறு விதமான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஹம்மிங், யூடியூப்பில் ஒரு பாடலை டார்க் மோடில் பார்ப்பது போன்ற அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயனர் அனுபவத்தை மேம்படுத்தக்கூடிய ஆம்பியன்ட் மோட் (Ambient Mode) இந்த அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது.
யூடியூப் ஆம்பியன்ட் மோட் என்றால் என்ன?
உங்களது வீடியோ காணும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உண்டாகக்கூடிய லைட்டிங் விளைவு ஆம்பியன்ட் மோட் (Ambient Mode) எனப்படுகிறது. இந்த அம்சம் அக்டோபர் 2022-ல் அறிமுகமானது. இருட்டான அறையில் அமர்ந்து டிவி பார்ப்பது போன்ற விளைவை இந்த அம்சம் ஏற்படுத்துகிறது. இந்த அம்சத்தை ஐபோன், டெஸ்க்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு யூஸர்கள் அனுபவித்து மகிழலாம்.
டார்க் தீமை எனேபிள் செய்வது எப்படி?
ஐபோன், ஆண்ட்ராய்ட் மற்றும் டெஸ்க்டாப்பில் இருந்து யூடியூப்பில் உள்ள ஆம்பியன்ட் மோடை எனேபிள் செய்வதற்கு டார்க் தீமை கட்டாயமாக ஆன் செய்ய வேண்டும். எனவே ஆம்பியன்ட் மோடுக்கு முன்பு டார்க் தீமை எப்படி ஆன் செய்வது என்பதை பார்க்கலாம்.
iOS மற்றும் ஆண்ட்ராய்டு போனுக்கு:
உங்கள் போனில் உள்ள யூடியூப் அப்ளிகேஷனை திறக்கவும், மேல் வலது மூலையில் தெரியும் உங்களுடைய ப்ரொபைல் படத்தை கிளிக் செய்யுங்கள் > செட்டிங்ஸ் > அப்பியரன்ஸ் > டார்க் தீமை தேர்வு செய்யவும்.
டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு: உங்களுடைய ப்ரொபைல் படத்திற்கு செல்லவும் > அப்பியரன்ஸ் > டார்க் தீமை தேர்வு செய்யவும்.
யூடியூப்பில் ஆம்பியன்ட் மோடை எனேபிள் செய்வது எப்படி?
நீங்கள் டார்க் தீமை எனேபிள் செய்த உடனேயே ஆம்பியன்ட் மோட் ஆட்டோமேட்டிக்காக எனேபிள் ஆகிவிடும். இதனை சோதிப்பதற்கு நீங்கள் பின்வரும் படிகளை பின்பற்றலாம்.
1. உங்களுடைய டார்க் தீமை எனேபிள் செய்தவுடன் ஐபோன், ஆண்ட்ராய்டு அல்லது டெஸ்க்டாப்பில் இருக்கும் யூடியூப்பில் ஏதாவது ஒரு வீடியோவை ப்ளே செய்து பாருங்கள்.
2. யூடியூப் பிளேயரின் மேல் வலது மூலையில் உள்ள கியர் ஐகானில் ஆம்பியன்ட் மோடை தேர்வு செய்யுங்கள்.
3. நீங்கள் ஆம்பியன்ட் மோடுக்கு மாறியவுடன் வீடியோவில் மைல்டான நிறங்கள் மாறுவதை நீங்கள் காண்பீர்கள்.
4. நிறம் மாறியதும் யூடியூப் பிளேயரின் பேக்ரவுண்ட் சற்று மங்கலாகி தெரியும்.
இந்த கலர் விளைவின் தீவிரத்தை ஆம்பியன்ட் மோடு ஐகானை கிளிக் செய்வதன் மூலமாக நீங்கள் மாற்றியமைக்கலாம். மேலும் டார்க் மோடை நீங்கள் டிசேபிள் செய்து விட்டால் ஆம்பியன்ட் மோடும் டிசேபிள் ஆகிவிடும்.