What is CAA : சிஏஏ சட்டத்தின் புதிய விதிகள் என்ன? யார் யார் விண்ணப்பிக்கலாம்?
கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆறு ஆண்டுகள் இந்தியாவில் இருந்தாலே குடியுரிமை வழங்க ஏதுவாக சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது பாஜக அரசு. குறிப்பாக, 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளில் மத அடிப்படையில் இன்னல்களை எதிர்கொண்டவர்களுக்கே குடியுரிமை என மசோதா வகுக்கப்பட்டது.
அதிலும், இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்கள் இல்லையென்றாலும் அவர்கள் குடியுரிமை பெற தகுதியானவர்கள் என வரையறுக்கப்பட்டது. அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வரும் இஸ்லாமியர்கள் இந்திய குடியுரிமை பெற முடியாது. இதே போன்று, தமிழ்நாட்டில் நீண்ட காலமாக அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க இச்சட்டத்தில் இடமில்லை. 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா மக்களவையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது.
மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு சட்டமானது. மதத்தை அடிப்படையாக கொண்டு குடியுரிமை வழங்கும் சர்ச்சைக்குரிய இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பாஜக அல்லாத மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. வங்கதேசத்தில் இருந்து வரும் அகதிகளால் தங்களது உரிமைகள் பறிபோகும் என வடகிழக்கு மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி சிஏஏ சட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்த நிலையில், நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதற்கான விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இதற்காக இணையதள முகவரி வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்திய குடியுரிமை பெற யார் யார் விண்ணப்பிக்கலாம் என்ற விதிகள் மத்திய அரசின் அறிவிக்கையில் இடம்பெற்றுள்ளன. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்லது இந்திய குடியுரிமை பெற்றவரை திருமணம் செய்தவர் தகுதி பெற்றவராகிறார். இந்திய குடிமகனின் 18 வயது நிரம்பாத பிள்ளைகளும், இந்திய குடிமக்களை பெற்றோராக உடையவரும் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம். பெற்றோரில் யாரோ ஒருவர் சுதந்திர இந்தியாவின் குடிமகனாக இருந்திருக்கும்பட்சத்தில், அவரும் தகுதிபெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான OCI கார்டு உள்ளவர்களும் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் இரண்டு சிறப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று புதிய விதிகள் தெரிவிக்கின்றன. விண்ணப்பதாரர் அளிக்கும் விவரங்கள் சரியானதே என ஒரு இந்தியக் குடிமகன் பிரமாண பத்திரம் அளிக்க வேண்டும் என்றும், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகளில் ஒன்றை எழுதவோ, படிக்கவோ, பேசவோ அறிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பத்தை மத்திய அரசு நியமிக்கும் சிறப்பு அதிகாரி தலைமையிலான மாவட்ட அளவிலான குழு சரிபார்க்கும். ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பிறகு மாநில அரசின் அதிகாரமளிக்கப்பட்ட குழுவுக்கு இந்த விண்ணப்பம் அனுப்பப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்புப்பிரிவு இயக்குநர் தலைமையில் அந்தந்த மாநிலங்களில் அதிகாரமளிக்கப்பட்ட குழு இயங்கும். விண்ணப்பம் மற்றும் ஆவணங்களில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியானதா என மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு ஆய்வு செய்யும்.அனைத்து விவரங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் விண்ணப்பதாரருக்கு குடியுரிமை வழங்கப்படும்.