ஐடி துறையில் என்ன நடக்கிறது..? ஐடி ஊழியர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது என்ன..?
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், விப்ரோ, HCL டெக் ஆகிய இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள், 2024 ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில், மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 50,000 க்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக அறிவித்துள்ளன.
பொதுவாக இந்திய ஐடித் துறையில் டாப் 5 இடத்தில் இருக்கும் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா ஆகியவை அதிகப்படியான ஊழியர்களை பணியில் நியமிப்பது வழக்கம். குறிப்பாக லாக்டவுன் காலத்தில் போட்டிப்போட்டு அதிக சம்பளம் கொடுத்து ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாற்றியுள்ளது, இதற்கு முக்கியமான காரணம் 2, ஆனால் இவ்விரு காரணத்தைச் சார்ந்து பல காரணிகள் ஐடி ஊழியர்களின் தூக்கத்தைத் தொலைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. முதலாவது பொருளாதார மந்தநிலையால் டெக் சேவைகளுக்கு முதலீடு செய்வதை உலக நாடுகள் குறைத்துள்ளது, இரண்டாவதாக ஏஐ.
இதனால் தற்போது இந்திய ஐடி துறை “வர்த்தகத்தை நடத்துவது” என்பதிலிருந்து “வர்த்தகத்தை மாற்றுவது” என்ற நிலைக்கு மாறி வருகிறது, இதனால் பணியாளர் எண்ணிக்கையிலும், புதிதாகச் சேர்க்கப்படும் பணியாளர் அளவிலும் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகளவில் அனைத்து துறையும், அனைத்து நிறுவனங்களும் பெரிய அளவில் டிஜிட்டல் சேவைகளையும், டிஜிட்டல் கட்டமைப்புகளையும் பயன்படுத்த துவங்கியதால் ஐடி துறை பணியாளர் சேர்க்கையை அதிகரித்தது. ஆனால், தற்போது சவால்களை எதிர்கொள்ளும் நிலையில்..
இந்திய ஐடி துறையில் தற்போது பணியில் இருக்கும் 54 லட்சம் பணியாளர்கள் எண்ணிக்கையே சவால் மிகுந்ததாக உள்ளது என்று டீம் லீஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் துணைத் தலைவர் முனிரா லோலிவாலா எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
இதை விட முக்கியமாக செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் காரணமாகத் திறன் மேம்பாடு ஏற்பட்டு வருவாய் மற்றும் பணியாளர் சேர்க்கையில் குறுகிய கால அழுத்தம் ஏற்பட இருந்தாலும், இறுதியில் செயற்கை நுண்ணறிவுடன் இயங்கக்கூடிய திறன்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி வீனேத் நாயர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய கடுமையான வர்த்தக சூழ்நிலையிலும், ஏஐ ஆதிக்கத்திலும் இணையதள வணிகம் மற்றும் GenAI, IoT, Big Data ஆகிய துறைகளில் திறன் பெற்ற தொழில் வல்லுநர்களுக்கான தேவை அதிகமாகவே உள்ளது. கடந்த 6 மாத்தில் இப்பிரிவு ஊழியர்களுக்கான தேவை சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கியூஸ் ஐடி ஸ்டாஃபிங் நிறுவனத்தின் துணை தலைமை செயல் அதிகாரி கபில் ஜோஷி தெரிவித்துள்ளார்.