டெஸ்லா வந்தா என்ன வராட்டி என்ன.. தமிழ்நாட்டு-க்கு 2 மெகா திட்டம் கிடைச்சிருக்கு இது போதும்..!!
டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் மத்திய அரசு முதல் மாநில அரசு வரையில் பல விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், டெஸ்லா வரிச் சலுகை இல்லாமல் முதலீடு செய்ய முடியாது எனத் திட்டவட்டமாக உள்ளது. இதனால் டெஸ்லா இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
டெஸ்லா-வின் ஜிகாபேக்டிரியை தனது மாநிலத்தில் நிறுவத் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா எனப் பல மாநிலங்கள் முயற்சி செய்தாலும் கடைசியில் வரிச் சலுகை என்ற ஒரு விஷயத்தில் அனைவரின் முயற்சிகளும் தோல்வி அடைந்தது.
OLA: ஆனால் தமிழ்நாடு அரசு முன்கூட்டியே திட்டமிட்டு டெஸ்லா-வுக்கு இணையாக மாநிலத்தில் எலக்ட்ரிக் வாகன துறையில் முதலீடுகளை ஈர்க்க முடிவு செய்தது. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஓலா மாபெரும் தொழிற்சாலையை வைத்திருந்தாலும் அதன் புதிய முதலீடுகள், விரிவாக்கத் திட்டங்களுக்கு வேகமாக ஒப்புதல் அளிக்கும் பணிகளைத் தமிழ்நாடு அரசு செய்தது.
Vinfast: இதைத் தொடர்ந்து வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய மற்றும் புதிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் இந்தியாவில் முதலீடு செய்ய வந்த போது முதல் ஆளாகத் தமிழ்நாடு EV துறைக்குத் தேவையான அனைத்துக் கட்டமைப்பு, சேவைகளை வழங்குவதாக உறுதி அளித்தது.
தூத்துக்குடி: இதன் வாயிலாக ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசுடன் வியட்நாம் வின்பாஸ்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி தூத்துக்குடியில் Vinfast நிறுவனத்தின் உற்பத்தி ஆலை அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டித் துவக்கி வைக்கிறார் நமது தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்.
16,000 கோடி ரூபாய்: வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் டெஸ்லா-வுக்கு இணையான நிறுவனம் இல்லையென்றாலும் இதன் சர்வதேச வர்த்தகக் கனவிற்குத் தமிழ்நாடு பேஸ்மென்ட் ஆக இருக்கப்போகிறது. இதன் மூலம் 16,000 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் இந்தத் தொழிற்சாலை ஏற்றுமதி சார்ந்து இருக்கும்.
Ford: இதைத் தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் சென்னை மறைமலைநகர் தொழிற்சாலையைப் பயன்படுத்தித் தனது புதிய எடிஷன் Endeavour காரை இந்திய சந்தைக்குக் கொண்டு வருவதன் மூலம் மீண்டும் இந்திய சந்தைக்குள் நுழைய திட்டமிட்டு உள்ளது.
மாக்-ஈ கார்: ஆனால் இந்த வாரம் ஃபோர்டு நிறுவனம் உயர்தர எலக்ட்ரிக் காரான முஸ்டாங் மாக்-ஈ காருக்கான பெயரை இந்தியாவில் பதிவு செய்து அறிமுகம் செய்ய உள்ளது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
அசம்பிளி தொழிற்சாலை: Mustang Mach-E கார் விற்பனை இந்தியாவில் சிறப்பாக இருந்தால் கட்டாயம் சென்னை தொழிற்சாலையில் CBD எனப்படும் completely breakdown unit ஆகக் காரின் மொத்த பாகங்களும் இறக்குமதி செய்யப்பட்டுச் சென்னை தொழிற்சாலையில் அசம்பிள் செய்யப்பட அதிக வாய்ப்புகள்.
BYD நிறுவனம்: தற்போது சீனாவின் BYD நிறுவனம் சென்னையில் அசம்பிள் செய்து தான் தனது கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதேபோல் சீனாவின் BYD இந்தியாவில் பல பில்லியன் டாலர் முதலீடு செய்ய விண்ணப்பம் கொடுத்துள்ளது.
China: ஆனால் சீனா எல்லை பிரச்சனைக்குப் பின்பு சீனா முதலீடுகளை மொத்தமாகக் குறைக்க முடிவு செய்த மத்திய அரசு BYD முதலீடுக்கு அனுமதி அளிக்காமல் உள்ளது. இப்படிப் பல நிறுவனங்கள் மூலம் டெஸ்லாவுக்கு இணையான முதலீடுகளைத் தமிழ்நாடு பெற்று வருகிறது.
EV Ecosystem: இதைத் தாண்டி இருசக்கர வாகன துறை, எலக்ட்ரிக் கார்களுக்கான உதிர் பாகங்கள் உற்பத்தி செய்யும் MSME நிறுவனங்கள், எலக்ட்ரிக் வாகன துறையில் இயங்கும் கோயம்புத்தூர் ELECTRA EV போன்ற பல நிறுவனங்கள் மூலம் சிறிதும் பெரிதுமாகத் தமிழ்நாடு அரசு EV துறையில் முதலீடு பெற்று வருகிறது. இதனால் டெஸ்லா தமிழ்நாட்டு வந்தா என்ன வராட்டி என்ன..? தமிழ்நாடு EV துறையில் வளரப்போவது உறுதி.