சட்டமன்ற நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை? உயர்நீதிமன்றம் கேள்வி

நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில், தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை உள்ளது என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விஜயகாந்த் மரணமடைந்த விவரம் குறித்து வழக்கறிஞர் V.T.பாலாஜி நீதிமன்றத்தின் கவனத்துக்கு தெரிவித்ததுடன், அவரது சட்டப்பூர்வமான பிரதிநிதி மூலம் வழக்கை தொடர்ந்து நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தற்போது தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரம், கவனஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதங்கள், ஆளுநர் உரை, பட்ஜெட் உரைகள், அமைச்சர்களின் பதிலுரைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் போது, அவை நேரடியாக ஒளிபரப்பப்பட வாய்ப்புள்ளதால், சபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய இயலாது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த 2 முறை அதிமுக ஆட்சியின் போது, இந்த வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தார். அப்போது, பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்யப்பட வில்லை என்றும், தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நேரலையாக ஒளிபரப்ப வேண்டுமென வலியுறுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து நீதிபதிகள், நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை உள்ளது எனக் கேள்வி எழுப்பினர். பின்னர், இது சம்பந்தமாக விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *