பெட்ரோல், டீசல் கார் இறக்குமதிக்கு தடைவிதிக்கும் எத்தியோப்பியா அரசு… காரணம் என்ன..?

பெட்ரோல், டீசல் கார்களை இறக்குமதி செய்ய தடை விதிக்க ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியா அரசு திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை அதிகரிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர், எலெக்ட்ரிக் வாகனங்களை தவிர்த்து இனி எந்தவிதமான கேஸோலின் ஆட்டோமொபைல்களையும் எங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப் போவதில்லை என எங்களுடைய அரசு முடிவெடுத்துள்ளது. ஏனென்றால் நாங்கள் எரிபொருளை வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்கிறோம். அந்நியச் செலவானி முழுவதும் இதற்கே செலவாகிறது. ஆனால் எத்தியோப்பியாவில் மின்சாரம் அபரிதமாக கிடைக்கிறது. எரிபொருளை விட இதன் செலவு குறைவுதான் எனக் கூறுகிறார் எத்தியோப்பியா போக்குவரத்து அமைச்சர்.

எத்தியோப்பியா நாட்டின் பசுமை போக்குவரத்து திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த அறிவிப்பை பார்க்க வேண்டியுள்ளது. நாடு முழுவதும் எலெக்ட்ரிக் கார்களுக்காக சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்நியச் செலவானியை விரயமாக்கும் இண்டர்னல் கம்பஸ்டன் இஞ்சின் கார்களை வாங்குவதை தடுப்பதோடு எரிபொருள் இறக்குமதியை குறைக்க எத்தியோப்பியா அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. கடந்த வருடம் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக 6 பில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்துள்ளது எத்தியோப்பியா.

இந்த அறிவிப்பால் ஏற்கனவே எத்தியோப்பியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஹூண்டாய், வோக்ஸ்வேகன், ரெனால்ட், லடா, இசுசூ போன்ற கார் நிறுவனங்களின் விற்பனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்துமே உள்ளூர் நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்தே இங்கு இயங்கி வருகிறது. மேலும் இங்குள்ள ஆலைகள் இண்டர்னல் கம்பஸ்டன் இஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் வகையில் உள்ளது. இந்த தடை அறிவிப்பு பழைய கார்களுக்கு பொருந்துமா என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை.

குறைந்த மக்கள்தொகை மட்டுமே கொண்ட எத்தியோப்பியாவில் எல்லாராலும் கார் வாங்கும் சாத்தியக்கூறுகள் உள்ளது. ஆனால் இந்த தடை அறிவிப்பு பலரது கனவை நிறைவேறாத ஆசையாக மாற்றியுள்ளது. அதே சமயம் எலெக்ட்ரிக் கார்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. சமீப வருடங்களாகவே எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை அதிகப்படுத்த பல்வேறு முயற்சிகளை எத்தியோப்பியா அரசு எடுத்து வருகிறது. அதன்படி அடுத்த பத்தாண்டிற்குள் 4,800 எலெக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் 1,48,000 எலெக்ட்ரிக் கார்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் கார்களை அனைவரும் வாங்குவதற்கு வசதியாக பலவிதமான வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன.

மின்சார உள்கட்டமைப்பில் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டாளராக இருக்கும் எத்தியியோப்பியா, எதிர்கால வளர்ச்சிக்கு மின்சாரத்தையே பெரிதும் நம்பியுள்ளது. ஆப்ரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி நிலையம் இங்குதான் உள்ளது. விரைவில் திறக்கப்படவுள்ள இந்த நிலையத்திலிருந்து மட்டுமே 3,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *