தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கி இருக்கும் வரி பகிர்வு என்ன? வெள்ளை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் விளக்கம்!!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்தார். 59 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையின் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெறும் என்றும் சனிக்கிழமை மாநிலங்களவையில் விவாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெறும் விவாதத்தின் மீது நிர்மலா சீதாராமன் பதிலளிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி இந்த வெள்ளை அறிக்கை குறித்து பாஜகவினர் நாடு முழுவதும் விளக்க உரை நிகழ்த்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியின் பத்தாண்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் பொருளாதாரத்தில் என்ன தவறுகள் நடந்தன, அவை எவ்வாறு மோடியின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் சரி செய்யப்பட்டது என்பது குறித்து வெள்ளை அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
மேலும் பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வு எந்தளவிற்கு வழங்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்தும் இந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அலுவலக எக்ஸ் பதிவில் வெளியாகி இருக்கும் தகவலில், ”2004-14 கால கட்டத்தில் தமிழகத்திற்கு வரி பகிர்வு ரூ.94,977 கோடியாக வழங்கப்பட்டுள்ளது. இதுவே 2014-24 கால கட்டத்தில், டிசம்பர் 2023 நிலவரப்படி ரூ.2,77,444 கோடி தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இது 192% அதிகமாகும்.
அதேபோல், 2004-14 கால கட்டத்தில், தமிழகத்திற்கு ரூ.57,924.42 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. 2014-23ல் இது ரூ.2,30,893 கோடியாக இருந்தது. இது ஒன்பது ஆண்டுகளில் 300% அதிகமாகும்.
2021-22 ஆம் நிதியாண்டில், 50 ஆண்டு வட்டியில்லா கடன் திட்டத்தின் ஒரு பகுதியாக, மூலதனச் செலவினங்களுக்காக ரூ.505.50 கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டில் ரூ. 3,263 கோடியும், 2023-24 ஆம் நிதியாண்டில், டிசம்பர் 11, 2023 நிலவரப்படி, ரூ.2643.65 கோடியும் 50 ஆண்டு கால வட்டியில்லா கடனாக மாநிலத்திற்கு மூலதனச் செலவுக்காக வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.