கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் டைட்டில் என்ன? லேட்டஸ்ட் அப்டேட்….
கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிக்கும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது 21 வது படத்தின் டைட்டில் குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலையொட்டி வெளிவந்த அயலான் திரைப்படம், அதற்கு முன்பு வெளிவந்த மாவீரன் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் தற்போது தன்னுடைய 21 வது படத்தில் நடித்து வருகிறார். இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இவர் முன்னதாக கௌதம் கார்த்திக் நடித்த ரங்கூன் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது 21 வது படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போர்க்களத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக மாறி இருக்கும் சாய் பல்லவி இந்தப் படத்தில் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இன்னும் ஒரு மாதத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவு பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த படத்திற்கு போர் கண்ட சிங்கம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமல் இந்த படத்தின் தயாரிப்பாளராக இருக்கும் நிலையில், அவர் நடிப்பில் சூப்பர் ஹிட்டான விக்ரம் படத்தில் போர் கண்ட சிங்கம் என்ற பாடல் இடம் பெற்றிருந்தது.
அதையே சிவகார்த்திகேயனின் 21 வது படத்தின் டைட்டிலாக பட குழுவினர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வரும் 17ஆம் தேதி அன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.