என்னங்க இது? இந்திய அணியாக மாறப் போகும் ஆஸ்திரேலியா.. இப்படி கூட நடக்குமா?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இனி இந்தியர்களே அதிகம் இடம் பெறப் போகிறார்கள் என்ற ஒரு தகவல் இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் அதிக அளவில் கிரிக்கெட் ஆடி வருவதாக குறிப்பிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள “Play HQ” என்ற செயலி ஒன்று உள்ளது. அதில் இதுவரை பதிவு செய்தவர்களில் “சிங்” என்ற கடைசி பெயரை கொண்டவர்களே அதிக அளவில் இடம் பெற்று இருப்பதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறி உள்ளது.
அந்த செயலியில் இரண்டாவதாக அதிக அளவில் இடம் பெற்றுள்ள பெயர் “ஸ்மித்”, மூன்றாவதாக இடம் பெற்றுள்ள பெயர் “பட்டேல்” எனவும் கூறி உள்ளது. மேலும், சர்மா, கான், குமார் என முடியும் பெயர்கள் முதல் பதினாறு இடங்களில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறி உள்ளது.
இதன் மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் ஆடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருவது தெரிகிறது. இதை வைத்தே எதிர்காலத்தில் ஆஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி வீரர்கள் அதிக அளவில் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது.
தன்வீர் சங்கா என்ற இந்திய வம்சாவளி வீரர் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று சில போட்டிகளில் ஆடி இருக்கிறார். எனினும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே போல, ஆஸ்திரேலிய அண்டர் 19 அணியில் ஹர்ஜாஸ் சிங் என்ற இளம் வீரர் இடம் பெற்று இருந்தார். அவரது சிறப்பான பேட்டிங்கால் ஆஸ்திரேலிய அணி, இந்திய அண்டர் 19 அணியை வீழ்த்தி 2024 அண்டர் 19 உலகக்கோப்பையை வென்றது.
இந்த உதாரணங்களை சுட்டிக் காட்டி எதிர்காலத்தில் ஆஸ்திரேலிய அணியில் பல இந்திய வம்சாவளி வீரர்களை காணலாம் என கூறி வருகின்றனர். கனடா, அமெரிக்கா போன்ற கிரிக்கெட் அதிகம் பிரபலமாகாத நாடுகளின் அணிகளில் ஏற்கனவே இந்திய வம்சாவளி வீரர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். இனி கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய அணியிலும் இந்திய வம்சாவளி வீரர்கள் அதிக அளவில் இடம் பெறக் கூடும்.