எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே.. பாவம் ஜெட்ஏர்வேஸ் நரேஷ் கோயல்..!!
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு, குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸின் நிறுவனரான நரேஷ் கோயல், 1.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் 16வது பணக்காரராக அறிவிக்கப்பட்டார்.
அப்போது இந்திய விமானப் போக்குவரத்து துறையே இவருடைய கட்டுப்பாட்டில் தான் இருந்தது.இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 74 வயதான மும்பையின் ஆர்தர் சாலையில் சிறையிலிருந்து தனது நோய்வாய்ப்பட்ட மனைவியைச் சந்திக்க வெளியே வந்தார்.
இப்போது அவரைப் பலர் புகைப்படம் எடுத்தனர். கடந்த வாரம் நரேஷ் கோயல் வாழ்வில் எந்த நம்பிக்கையும் இல்லை, சிறையிலேயே என் உயிர் பிரிந்தால் போதும் என நீதிமன்றத்தில் சமீபத்திய விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் பல உடல்நல பாதிப்புகள் உடன் போராடுவதாகவும், நீண்ட நேரம் நிற்க முடியவில்லை என்றும் நீதிமன்றத்தில் கூறியதன் மூலம் நரேஷ் கோயல் வரத்தக உலகில் தலைப்பு செய்தியாக மாறினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நரேஷ் கோயல் சிறையில் உள்ளார். பணமோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்க இயக்குனரகம் அவரைக் கைது செய்து மும்பை சிறையில் அடைத்துள்ளது. கனரா வங்கி அளித்த புகாரின் பேரில் ED விசாரணையை தொடங்கி நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு காலத்தில் காஸ்ட்லியான கோட், சூட் உடன் வலம் வந்த நரேஷ் கோயல், தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த போது வெள்ளை குர்தா மற்றும் பைஜாமா அணிந்து, வெட்டப்படாத தாடி மற்றும் சோர்வாகத் தோன்றும் கண்களுடன் வந்தார்.
சிறையில் இருந்து நரேஷ் கோயல் வெளியான போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது பெரிய அளவில் டிரெண்டாகியுள்ளது.பழைய போட்டோக்களையும், தற்போதைய போட்டோ-வை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நரேஷ் கோயல் வாழ்க்கை எந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பது தெரிகிறது. ஜனவரி 13 அன்று, படுத்த படுக்கையான மனைவி அனிதா கோயலைச் சந்திக்க நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றதைத் தொடர்ந்து கடுமையான விதிமுறைகள், கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சிறையில் இருந்து வெளியே வந்தார் நரேஷ் கோயல் அப்போது எடுக்கப்பட்ட படம் தான் இது.