வீரர்கள் அறையில் ரோஹித் சர்மா செய்த செயல்.. பிசிசிஐ நடவடிக்கை பாயுமா? வெளியான புகைப்படம்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பிசிசிஐ-யின் முக்கிய விதி ஒன்றை மீறி இருக்கிறார். குறிப்பாக அந்த விதி ஸ்பாட் ஃபிக்ஸிங் மற்றும் மேட்ச் ஃபிக்ஸிங்கை தடுக்க கொண்டு வரப்பட்ட விதியாகும். அதை இந்திய அணியின் கேப்டனே மீறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன நடந்தது?

ரஞ்சி ட்ராபி தொடரின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மும்பை – விதர்பா அணிகள் இறுதிப் போட்டியில் மோதி வருகின்றன. இந்தப் போட்டியை காண சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற முன்னாள் மும்பை மாநில வீரர்கள் நேரில் வந்தனர்.

அதே போல, இந்திய அணி கேப்டனும் மும்பை மாநில கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் என்பதால் அவரும் போட்டியை காண நேரில் வந்தார். அவர் பார்வையாளர்கள் பகுதியில் அமராமல் மும்பை மாநில வீரர்கள் அறையில் அமர்ந்தார். அங்கே அவர் மும்பை அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானேவுடன் பேசிக் கொண்டு இருந்தார். அந்த காட்சியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தது.

பிசிசிஐ பகிர்ந்த அந்த வீடியோவில் ரோஹித் சர்மா கையில் தொலைபேசியை வைத்திருப்பதும், அதை பயன்படுத்துவதும் தெளிவாக தெரிந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பிசிசிஐ விதிப்படி வீரர்கள் அறைக்குள் யாரும் தொலைபேசி உள்ளிட்ட நவீன தொலைதொடர்பு கருவிகள் எதையும் கொண்டு செல்லக் கூடாது. வீரர்கள் யாரும் அதை பயன்படுத்தக் கூடாது என்பதோடு பயிற்சியாளர்கள் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்பட்ட லாப்டாப் உள்ளிட்ட சில எலக்ட்ரானிக் பொருட்களை தவிர வேறு எந்த கருவிகளையும் எடுத்துச் செல்லக் கூடாது. இந்த விதி மேட்ச் ஃபிக்ஸிங்கை தடுக்க கொண்டு வரப்பட்டது. இது சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி உள்ளூர் போட்டிகளுக்கும் பொருந்தும்.

இந்த நிலையில், ரோஹித் சர்மா ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி நடந்து கொண்டு இருந்த போதே தொலைபேசியை வீரர்கள் அறையில் பயன்படுத்தி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் பயன்படுத்திய ஆதாரத்தை பிசிசிஐயே வீடியோ எடுத்து வெளியிட்டு இருப்பது தான் இதில் வேடிக்கை. பிசிசிஐ நடவடிக்கை எடுக்க நினைத்தால் முதலில் ரோஹித் சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். ஆனால், அது எதுவும் நடக்காது என தெரிகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *