பேடிஎம் மனி மூலம் முதலீடு செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும்? விரிவான வழிகாட்டி..
பேடிஎம் நிறுவனத்தின் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செயல்பாட்டுக்கு ரிசர்வ் வங்கி முழு தடை விதித்துள்ளது. அதாவது வரும் 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செயல்படாது. அதன் வாடிக்கையாளர்கள் பணப் பரிமாற்றங்கள் எதையும் மேற்கொள்ள முடியாது.
எனவே 29ஆம் தேதிக்குள் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிலுள்ள தொகையை எடுத்துவிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு பேடிஎம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு விரிவான பதில்களை பார்க்கலாம்.
பேடிஎம் மூலம் நான் செய்த முதலீடுகள் என்ன ஆகும்?: பேடிஎம் மணி(PAYTM MONEY) மூலம் வாடிக்கையாளர்கள் ஈக்விட்டி மற்றும் மியூச்சுவல் பண்ட், தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
பேடிஎம் மணி முதலீடு செய்ய எளிதாக இருந்ததால் ஏராளமான வாடிக்கையாளர்கள் இதன் மூலம் எஸ்ஐபி முதலீடு போன்றவற்றை செய்து வந்தனர். அவர்களால் இனி முதலீட்டை தொடர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நிச்சயம் தொடரலாம் என பேடிஎம் நிறுவனம் பதில் அளித்துள்ளது.
பேடிஎம் மணி மூலம் தொடர்ந்து முதலீடு செய்யலாம் ஆனால் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியை, பணம் செலுத்த மற்றும் பெறுவதற்கான வங்கியாக அளித்திருந்தால் அதை மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் மூலம் வாங்கிய டிஜிட்டல் கோல்டு என்ன ஆகும்?ச பேடிஎம் செயலியில் டிஜிட்டல் தங்கம் வாங்குவதற்கான பிரிவும் இருக்கிறது. இதனை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கி சேமித்தவர்கள் தற்போது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஆனால் பேடிஎம் டிஜிட்டல் கோல்டிற்கும், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் தொடர்பில்லை, எனவே வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டாம் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
NCMC கார்டு என்ன ஆகும்?: பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பின்னர் பேடிஎம் NCMC எனப்படும் நேஷ்னல் காமன் மொபிலிட்டி கார்டு செயல்படுமா என்ற கேள்விக்கு நிச்சயம் செயல்பாட்டில் தான் இருக்கும் என பேடிஎம் தெரிவித்துள்ளது.
இந்த வகை கார்டினை நாடு முழுவதும் மெட்ரோ மற்றும் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம். மேலும் ஷாப்பிங் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளிலும் பயன்படுத்தலாம். மற்ற வங்கிகளுடன் இணைத்து NCMC கார்டுகள் செயல்பாட்டில் இருக்கும் என பேடிஎம் தெரிவித்துள்ளது.
பேடிஎம் யுபிஐ பயன்படுத்த முடியுமா?: பேடிஎம் நிறுவனத்தின் பேமெண்ட்ஸ் வங்கிக்கு மட்டும் தான் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. எனவே பேடிஎம் யுபிஐ பயன்படுத்துபவர்களுக்கு எந்த வித பிரச்னையும் இல்லை. மற்ற வங்கிகளில் வைத்து கணக்கிற்கிஉ பேடிஎம் யுபிஐ பயன்படுத்தி வழக்கம் போல பரிமாற்றம் செய்ய முடியும்.