என்ன கருமம்டா இது.. பாத்ரூம் தண்ணீரில் பீர் தயாரிப்பா.. பில் கேட்ஸ் வேற முதலீடு செய்திருக்கிறாரே..!!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள எபிக் கிளீன்டெக் என்ற நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸின் பவுண்டேஷனின் Reinvent the Toilet Challenge என்ற திட்டத்தை இந்த நிறுவனம் செயல்படுத்துகிறது.
இது தண்ணீர் மறுபயன்பாட்டில் புரட்சியை உருவாக்கி வருகிறது.
Ilan Levy, Oded Halperin மற்றும் தந்தை-மகன் இரட்டையர்களான Igor மற்றும் Aaron Tartakovsky ஆகியோரால் நிறுவப்பட்டது.
இந்த நிறுவனம் 2012 இல் கேட்ஸ் அறக்கட்டளையிலிருந்து பெரும் தொகையை முதலீடாக திரட்டியது குறிப்பிடத்தக்கது. எபிக் கிளீன்டெக் நிறுவனம், டெவில்ஸ் கேன்யன் ப்ரூயிங் நிறுவனத்துடன் இணைந்து பீர் தயாரித்தது.
இது வீட்டில் பயன்படுத்தும் ஷவர், சலவை மற்றும் சிங்க் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு Ale எனப்படும் பீர் வகையை தயாரிக்கிறது. கேட்கவே கொடுரமாக இருக்குல்ல..
எபிக் கிளீன்டெக் உருவாக்கிய கோல்ஷ்-ஸ்டைல் ஏல்-க்கு (Kölsch-style ale) கடுமையான மத்திய மற்றும் மாநில எதிர்ப்புகள் கிளம்பியதால் எபிக் கிளீன்டெக் அந்த பீரை விற்க முடியவில்லை. இருப்பினும், தண்ணீர் மறுபயன்பாட்டின் பயன் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நிறுவனம் இலவசமாக பீர் விநியோகித்து வருகிறது.
சிஎன்பிசி பத்திரிக்கைக்கு எபிக் கிளீன்டெக் தலைமை நிர்வாக அதிகாரி ஆரோன் டார்டகோவ்ஸ்கி கூறியது போல், அவர்களின் பீர் தயாரிப்பின் பாதுகாப்பை பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறார். கடுமையான அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப்படுவதை வலியுறுத்துகிறார்.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள 40-அடுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கழிவுநீரை வடிகட்ட, ஒவ்வொரு நிமிடமும் அல்ட்ராஃபில்ட்ரேஷன் சவ்வுகளைப் பயன்படுத்தி பில்டர் செய்யப்படுகிறது. இந்த சுத்திகரிக்கப்பட்ட நீரை அல்ட்ராவைலெட் லைட் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யப்படுகிறது, இது மனித வயிற்றில் இயற்கையான செயல்முறையை ஒத்தது.
இறுதித் தயாரிப்பு மூன்றாம் தரப்பு ஆய்வகத்தால் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அதில் குடிநீரின் நிர்ணயிக்கப்பட்ட தரங்கள் உள்ளதா அல்லது மீறுகிறதா என்பதை உறுதிப்படுத்துகிறது என விளக்கம் கொடுக்கிறார்.
மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீரில் தயாரிக்கப்பட்ட பானங்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வது இன்னும் சாத்தியமில்லை என்றாலும், கலிபோர்னியா, கொலராடோ, புளோரிடா போன்ற மாநிலங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீரை பாதுகாப்பான குடிநீர் அமைப்பாக மாற்றுவதற்கான ஒழுங்குமுறை அமைப்புகள் உள்ளன.
டெக்சாஸ் மற்றும் அரிசோனா மாநிலங்கள் ஏற்கனவே பொது குடிநீர் குழாய்களில் அதன் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கியுள்ளன. இருப்பினும் வணிக விற்பனையில் சட்டமியற்றுபவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு நேரம் ஆகலாம் என்று டார்டகோவ்ஸ்கி கூறுகிறார்.
நீர் சேமிப்புக்கான அவசரம் மிக முக்கியமானது. பூமியின் நீரில் சுமார் 2.5% மட்டுமே மக்கள் குடிப்பதற்கு ஏற்ற நன்னீர். உலகளாவிய மக்கள்தொகை அதிகரித்து வருவதால், ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர்கள் வரவிருக்கும் உலகளாவிய நீர் நெருக்கடி பற்றி எச்சரிக்கின்றனர்.