இப்படி பவுலிங் செய்தால் என்ன செய்வது.. பும்ராவால் ஆட்டமே மாறிவிட்டது.. புலம்பிய இங்கிலாந்து வீரர்!

இங்கிலாந்து பேட்டிங்கின் இதயம் போல் உள்ள மிடில் ஆர்டரை ஒற்றை பவுலராக நட்சத்திர வீரர் பும்ரா கிழித்துவிட்டதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. 2ஆம் நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் வெறும் 60 ரன்கள் மட்டுமே கூடுதலாக எடுத்து 396 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய அணி போதுமான ரன்களை சேர்க்கவில்லை என்று விமர்சிக்கப்பட்ட நிலையில், 2ஆம் நாளிலேயே இங்கிலாந்து அணி 2 செஷனை கூட முழுமையாக விளையாட முடியாமல் ஆல் அவுட்டாகியது.

வெறும் 253 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானதால், இந்திய அணி 143 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் சொதப்பலுக்கு, இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா முக்கிய காரணமாக அமைந்துள்ளார். 15.5 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகள் மூலமாக பும்ரா ஒரு மேஜிக்கை நிகழ்த்தினார்.

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், ஓல்லி போப், பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்திய விதம் இங்கிலாந்து ஜாம்பவான்களையே மிரள வைத்துள்ளது. பிட்சில் எந்த உதவியும் இல்லாமல் பும்ராவால் எப்படி இதுபோல் பவுலிங் செய்ய முடிகிறது என்று வியந்து பாராட்டி வருகின்றனர். அதில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக்கின் பாராட்டு பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அலெஸ்டர் குக் பேசுகையில், கண்மூடி திறப்பதற்குள் பும்ரா தனி வீரராக ஆட்டத்தை இந்திய அணி பக்கம் திருப்பிவிட்டார். டக்கெட் மற்றும் கிராலி இருவரும் மிகச்சிறப்பாக பேட்டிங்கை தொடங்கினார்கள். கிராலி 76 ரன்களில் இருந்த போது, ஆட்டமிழந்தது திருப்புமுனையாக அமைந்துவிட்டது. அதன்பின் களத்திற்குள் புகுந்த பும்ரா, இங்கிலாந்து அணியின் இதயமான மிடில் ஆர்டரை கிழித்துவிட்டார். ரூட் ஆட்டமிழந்த போது, யாராலும் எதிர்கொள்ள முடியாத இன்ஸ்விங் யார்க்கரை சொருகி போப்பை அனுப்பி வைத்தார்.

அதன்பின் பேர்ஸ்டோவ், ஸ்டோக்ஸ் ஆகியோரும் பும்ராவிடம் ஆட்டமிழந்தனர். 253 ரன்கள் என்பது நிச்சயம் மிகக்குறைந்த ஸ்கோராகும். 114 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து நல்ல நிலையில் கையில் இருந்த ஆட்டத்தை இங்கிலாந்து அணி தவறவிட்டுள்ளது. சில நேரங்களில் எதிரணிக்கு தொப்பியை எடுத்து மரியாதை கொடுத்து தான் ஆக வேண்டும். நானும் சில ஆட்டங்களில் பும்ராவை எதிர்த்து விளையாடி இருக்கிறேன்.

ஆனால் இப்படியான பவுலிங்கை அவர் வீசியதில்லை. அவர் தனது வித்தியாசமான பவுலிங் ஸ்டைல் மூலம் வெவ்வேறு ஆங்கிளில் பவுலிங் செய்கிறார். இதன் காரணமாகவே பேட்ஸ்மேன்களுக்கு அவரை எதிர்த்து விளையாட திணறி போவதாக தெரிவித்துள்ளார். 100 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பவுலிங் சராசரி வைத்துள்ள பவுலர்கள் பட்டியலில் பும்ரா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *