என்ன பண்ண.. பாவமாதான் இருக்குது.. படுமோசமான கடன்கார நாடாகிப்போன பாகிஸ்தான்! காரணம் இதுதான்!
இஸ்லாமாபாத்: நமது அண்டை நாடான பாகிஸ்தான் அண்மை காலமாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இது நாம் நினைத்ததை விட மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என எச்சரிக்கும் வகையில் ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத்தை மையமாக கொண்ட தபாட்லாப் அமைப்பு பாகிஸ்தானின் பொருளாதார நிலை குறித்து சமீபத்தில் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் மிக மோசமான பொருளாதார பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக பாகிஸ்தானின் கடன் நிலைமை தீவிரமான நெருப்பு போல பரவி வருவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டை விட மோசமாக உள்ளது என்றும் கூறியுள்ளது. பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி கட்டுப்படுத்தக்கூடியது என சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு செய்தது இந்த நேரத்தில் நினைவு கூறத்தக்கதாகும்.
பாகிஸ்தான் தற்போது மிகப்பெரிய கடன் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, இது பேரழிவு தரும் பொருளாதார சுழற்சியை தூண்ட கூடும் என அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானின் தனிநபர் கடன் 2011இல் 823 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் 2023இல் 1122 அமெரிக்க டாலர்கள் என 36 விழுக்காடு அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2011 இல் 1295 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் 2023இல் 1223 அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.
பாகிஸ்தானில் கடன் மற்றும் வருமான வளர்ச்சி விகிதங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டே போகிறது.
உதாரணமாக, 2011 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு குழந்தைக்கு 70,778 பிகேஆர் (பாகிஸ்தான் நாணயம்) கடன் இருந்தது, ஆனால் அதுவே 2023 ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைக்கு 3, 21,341 பிகேஆர் என உயர்ந்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 முதல் பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது, அதே நேரத்தில் அதன் உள்நாட்டு கடன் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.
உற்பத்தி துறைகளிலோ அல்லது தொழில்துறையிலோ முதலீடுகள் இல்லாத நுகர்வு சார்ந்த மற்றும் இறக்குமதி சார்ந்த பொருளாதாரமாக இருப்பதே பாகிஸ்தானின் இந்த நிலைக்கு காரணம் என்கிறது தபாட்லாப் அறிக்கை. சமூக பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறுவதற்கான உத்திகள் ஆகியவற்றுக்கு வரும்நாட்களில் அதிக நிதி தேவைப்படும். இதற்காக மேலும் மேலும் கடன்களை வாங்கி பொருளாதார பேரழிவை பாகிஸ்தான் சந்திக்க போகிறது என்கிறது அந்த அறிக்கை.
ஜீசஸ் அலாவுதீன் மற்றும் அமரஹபீப் கான் ஆகியோரால் எழுதப்பட்டுள்ள இந்த அறிக்கையின் படி பாகிஸ்தானின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன் 2011ஆம் ஆண்டு முதல் கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே நிலை ஆட்சி இல்லாதது, இயற்கை பேரிடர்கள் ஆகியவற்றால் ஸ்திரத்தன்மை இல்லாமல் பொருளாதாரம் சிக்கி கிடக்கிறது.
எனவே பருவநிலை பேரழிவுகளுக்கு ஆளாக கூடிய பாகிஸ்தான் மீட்பு மற்றும் நிவாரணம் ஆகியவற்றுக்கான கணிசமான நிதி ஆதாரத்தை உருவாக்க வேண்டும் என இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. மாற்றம் மற்றும் விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் பாகிஸ்தானின் கடன் நெருக்கடி தீராது என்று தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் கடன் அளவுகள் பொருளாதார வளர்ச்சியை தடுக்கின்றன, ஏனெனில் அவை உற்பத்தி முதலீட்டை விட நுகர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன, இந்த போக்கை மாற்றினால் ஓரளவு தப்பிக்கலாம் என இந்த அறிக்கை அறிவுறுத்தியுள்ளது.