என்ன செய்றது.. கஷ்டமா தான் இருக்கு.. ரோகித் சர்மாவை வீழ்த்திவிட்டேனே.. அறிமுக வீரர் பஷீர் உற்சாகம்!
இரு ஆண்டுகளுக்கு முன் எனது முதல் டெஸ்ட் போட்டியின் முதல் விக்கெட்டாக ரோகித் சர்மாவை வீழ்த்துவேன் என்று கூறியிருந்தால் நானே சிரித்திருப்பேன் என்று இங்கிலாந்து அறிமுக வீரர் சோயப் பஷீர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முதன்மை ஸ்பின்னரான ஜாக் லீச் காயம் காரணமாக விலக, இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார் சோயப் பஷீர். இந்தியா வருவதற்கு முன்பாக இங்கிலாந்து அணி துபாயில் பயிற்சி மேற்கொண்டது. அதன்பின் இங்கிலாந்து அணி இந்தியா வந்த போது, அந்த அணியின் சோயப் பஷீருக்கு மட்டும் விசா அளிக்கப்படவில்லை.
இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கடுமையாக சாடியிருந்தார். அதேபோல் ரோகித் சர்மாவிடம் கேட்ட போது, அவரை நினைத்தால் பாவமாக தான் உள்ளது. முதல்முறையாக இந்தியாவுக்கு வருகிறார். நாங்கள் இங்கிலாந்து செல்லும் போது ஏதாவது ஒரு வீரருக்கு விசா மறுக்கப்பட்டாலும் இப்படிதான் நடக்கும். அதேபோல் விசா அலுவலகத்தில் நான் பணியாற்றவில்லை. விரைவில் இந்தியா வந்து கிரிக்கெட் ஆடுவார் என்று நம்புவதாக தெரிவித்தார்.
ரோகித் சர்மாவின் பதில் சிறிதளவில் நக்கலாக அமைந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றைய ஆட்டத்தில் சோயப் பஷீர், தனது முதல் டெஸ்ட் விக்கெட்டாக ரோகித் சர்மாவை வீழ்த்தி அசத்தினார். இதுகுறித்து சோயப் பஷீர் பேசுகையில், ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்துவேன் என்று இரு ஆண்டுகளுக்கு முன் யாராவது என்னிடம் கூறியிருந்தால் எனக்கும் சிரிப்பு வந்திருக்கும். ஆனால் டெஸ்ட் கேப்பை பெற்று, ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்திய ஸ்பெஷலான தருணம்.
ஏனென்றால் அவர் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ள கூடிய வீரர். இந்த தருணத்திற்காக அனைத்து வகையிலும் ஆதரவாக இருந்த குடும்பத்தினருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். விசா கிடைப்பதில் சிறிய பிரச்சனை இருந்தது. இருந்தாலும் இந்தியா வந்த பின், எனது அறிமுகம் நினைத்ததற்கும் அதிகம் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.
விசாகப்பட்டினம் பிட்சை பொறுத்தவரை பவுலிங் செய்ய கொஞ்சம் கடினமாக இருந்தது. பிட்சில் பெரிதாக எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஆனால் இந்திய அணியின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் ஆல் அவுட் செய்தால், நிச்சயம் நல்ல ஸ்கோரை அடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.