விராட் கோலி செய்தது அவமானம்.. அதனால் இங்கிலாந்து ரசிகர்கள் நிம்மதியா இருக்காங்க.. ஆண்டர்சன் அதிரடி
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகி இருக்கிறார். இந்த நிலையில், இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், விராட் கோலி ஆடாதது அவமானம் என பேசி இருக்கிறார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இந்த தொடருக்கு முன் இந்திய அணியில் அறிவிக்கப்பட்ட விராட் கோலி பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். அவரைத் தொடர்ந்து கே எல் ராகுல் முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் காயம் காரணமாக விலகினார். இவர்கள் இருவருக்கும் பதிலாக அறிமுக வீரர்களாக ரஜத் படிதார் மற்றும் சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் இடம் பெற்றனர்.
இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 – 1 என கைப்பற்றியும் விட்டது. ஆனால், பலரும் உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுள் ஒருவரான விராட் கோலி மற்றும் சிறந்த டெஸ்ட் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஆண்டர்சன் இடையேயான மோதலை காண ஆர்வமாக இருந்தனர். அது கடைசி வரை நடைபெறவில்லை. ஆண்டர்சன் அடுத்த ஆண்டிற்குள் ஓய்வு பெற்று விடுவார் என கூறப்படும் நிலையில் விராட் கோலி – ஆண்டர்சன் மோதலை இனி காண முடியாது.
இந்த நிலையில் விராட் கோலி இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்காதது குறித்து ஆண்டர்சன் பேசி இருக்கிறார். “எப்போதும் நாம் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவோம். இந்த நிலையில் விராட் கோலி இந்த தொடரில் இடம் பெறாதது அவமானம். பல ஆண்டுகளாக நாங்கள் களத்தில் சில பெரிய மோதல்களை சந்தித்துள்ளோம். ஆனால் எனக்கு மட்டுமல்ல, ஒரு அணியாக உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புகிறோம் என்று நான் நினைக்கிறேன், அவர் நிச்சயமாக சிறந்த வீரர்தான்” என்று ஆண்டர்சன் கூறினார்.
மேலும், “அவர் ஒரு தரமான வீரர் என்பதால் அவர் விளையாடாததற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் எங்கள் பார்வையில் எங்களே நாங்களே சோதிக்க விரும்புகிறோம். சிறந்த வீரரை எதிர்த்து விளையாட விரும்புகிறோம். அவருக்கு பல ஆண்டுகளாக பந்துவீசுவது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. அவர் விளையாடாதது அவமானம்” என்று ஆண்டர்சன் கூறினார்.