சினிமாவில் இருந்து விலக காரணம் என்ன? மனம் திறந்த நடிகை மும்தாஜ்..
தமிழ் திரையுலகில் இருந்த நடிகைகள் திரையுலகை விட்டு விலகினாலும், ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடிக்கும் ஒரு சில நடிகைகள் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படி, அனைவரது மனதையும் கொள்ளை கொண்டவர், மும்தாஜ். இவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் திரையுலகை விட்டே விலகினார். இதற்கான காரணம் என்ன தெரியுமா?
ரசிகர்களை கவர்ந்த மும்தாஜ்:
1999ஆம் ஆண்டு வெளியான மோனிஷா என் மோனலிசா படம் மூலம் அறிமுகமானவர், மும்தாஜ். இந்த படத்தில் அவர் டி.ராஜேந்தருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதில், கவர்ச்சியாக நடித்திருந்த இவரை அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான லூட்டி, சாக்லேட் ஆகிய படங்களில் அனைவரும் பார்த்தனர்.
நாயகியாக நடித்த படங்கள் மட்டுமன்றி, கேமியோ கதாப்பாத்திரங்களில் இவர் நடித்திருந்த படங்களும், வில்லியாக நடித்திருந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளன. அப்படித்தான் ‘குஷி’ படத்தில் இவர் இடம் பெற்றிருந்த ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ பாடல் ஹிட் ஆனதற்கு. இப்பாடல் பலத்த வரவேற்பை பெற்றதற்கு பெரிய காரணம் இசையமைப்பாளர் தேவா என்றாலும், மும்தாஜின் பங்கும் அதில் பெரிதாக இருந்ததது.
பிக்பாஸில் தோன்றினார்..
தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த மும்தாஜ், இடையிடையே தெலுங்கு படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இவர், நடிகை ஸ்ரீதேவி போல பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவோடு திரையுலகிற்குள் நுழைந்தார். கடைசியாக தெலுங்கில் வெளியான ‘டாமி’ என்ற படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்கு பிறகு 2018ஆம் ஆண்டு நடைப்பெற்ற பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்தார். இந்த போட்டியின் 91வது நாளில் இதிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு இன்னும் பல லட்சம் ரசிகர்கள் சேர்ந்தனர்.
திரையுலகில் இருந்து விலகல்..
நடிகை மும்தாஜ், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் மொத்தமாக திரையுலகை விட்டு விலகுவதாக தெரிவித்தார். பிக்பாஸிற்கு வருவதற்கு முன்னராவது அவ்வப்போது சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். ஆனால், இப்பாேது எந்த கேமரா முன்னரும் வருவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார். மும்தாஜ், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார். அதில், தான் திரையுலகை விட்டு விலகியதற்கான காரணம் குறித்து கூறியிருக்கிறார்.
தான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்ததாகவும், குர்ஆன் பற்றி தனக்கு நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார். மேலும், கடவுள் தனக்கு எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என கட்டளையிட்டிருப்பதாகவும் அது புரிய ஆரம்பித்தவுடன் தனக்குள் மாற்றம் தொடங்கியதாகவும் கூறியிருக்கிறார். இதன் காரணமாகவே தான் சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று முடிவெடுத்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.