Wheat Idiyappam: ஊட்டச்சத்து நிறைந்த கோதுமை மாவில் ஈசியா இடியாப்பம் செய்யலாம்..செய்முறை இதோ…

இடியாப்பம் என்றாலே நாம் பெரும்பாலும் அரிசிமாவில்தான் தயாரிப்போம். நாம் கோதுமை மாவிலும் இடியாப்பம் தயாரிக்கலாம். இது அனைத்து வயதினருக்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும். வாங்க கோதுமை இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – ஒரு கப், தண்ணீர் – ஒரு கப், தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, கடாய் லேசாக சூடானதும் கோதுமை மாவை அதில் சேர்த்து, லேசான தீயில் வாசம் வரும் வரை வறுக்க வேண்டும்.( மாவு தீய்ந்து விடாமல் பக்குவமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)

வறுத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விட வேண்டும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து, அதில் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இவை அனைத்தும் நன்றாக கொதித்த பிறகு இந்த தண்ணீரை எடுத்து நாம் வறுத்து வைத்திருக்கும் கோதுமை மாவில் சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியைக் கொண்டு மாவை நன்றாக கிளறி விட வேண்டும்.

சிறிது சூடு ஆறியதும் மாவை, கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளலாம். பிசைந்த மாவை 5 முதல் 10 நிடங்கள் மூடி போட்டு அப்படியே ஊற வைக்க வேண்டும்.

இப்பொழுது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மூடி வைத்து விட வேண்டும்.

இடியாப்பம் அல்லது இட்லி தட்டில் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து தேவையான அளவு உருண்டையாக உருட்டி இடியாப்பம் பிழியும் கட்டைக்குள் சேர்த்து இடியாப்ப தட்டில் பிழிந்துவிட வேண்டும்.

இட்லி சட்டியில் தண்ணீர் கொதித்த பின், பிழிந்து வைத்திருக்கும் இடியாப்பத்தை அதற்குள் எடுத்து வைத்து மூடி போட்டு குறைவான தீயில் ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *