இந்திய சாலையில் ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கை எப்போது பார்க்கலாம்… டெலிவரி தேதி இதுதான்!

ஹீரோ நிறுவனம் நாட்டில் அறியப்படும் மிக நம்பகத்தன்மை கொண்ட ஒரு முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனம் ஆகும். பட்ஜெட் பைக்குகள் விரும்புவோரை கவரும் பல மாடல்களை நிறுவனம் தனது பட்டியலில் கொண்டிருக்கிறது. ஆனால் காலத்தின் சூழல் அதிக திறன் கொண்ட பைக்குகளுக்கு மாறி வருவதால், ஹீரோ நிறுவனமும் அது சார்ந்த பைக்குகளை தயாரிக்கும் முனைப்பில் இறங்கியுள்ளது. நிறுவனம் உலகின் மிகப்பெரும் பிரீமியம் பைக் உற்பத்தியாளரான ஹார்லி டேவிட்சன் உடன் கூட்டணி சேர்ந்ததை அடுத்து இந்தியாவில் ஹீரோ மேவ்ரிக் 440 எனும் திறன்மிக்க பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
இதனுடன் நிறுவனத்தின் Xtream 125R பைக்கும் காட்சிப்படுத்தப்பட்டது. ஹீரோ மேவ்ரிக் 440 (Hero Mavrick 440) பைக்கின் எக்ஸ்-ஷோரூம் தொடக்க விலை ரூ1.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரைடர்களுக்கு சிறந்த தரத்தை இந்த பைக் வழங்கும் என வெளியிட்டு நிகழ்வில் ஹீரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 15, 2024 முதல் பைக்குகள் டெலிவரி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஹீரோ மேவ்ரிக் பைக் மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
– ஹீரோ மேவ்ரிக் 440 பேஸ் (அடிப்படை மாடல்): ரூ.1.99 லட்சம்
– ஹீரோ மேவ்ரிக் 440 மிட் (நடுத்தர மாடல்): ரூ.2.14 லட்சம்
– ஹீரோ மேவ்ரிக் 440 டாப் (பிரீமியம் மாடல்): ரூ.2.24 லட்சம்
ஹீரோ மேவ்ரிக் 440 டிசைன் மற்றும் அம்சங்கள் :
பெரிய எரிபொருள் கொள்கலன் உடன் வரும் மேவ்ரிக் 440 பைக்கில் இரண்டு பேர் அமர்ந்து செல்லும் ஒற்றை இருக்கை கொண்ட வடிவமைப்பு நிறுவப்பட்டுள்ளது. முன்பக்க முகப்பு விளக்குகளில் ஹெச் வடிவ DRL விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் எல்இடி முகப்பு விளக்குகள், இண்டிகேட்டர்கள் இதில் உள்ளன. மொத்தம் 35 அம்சங்கள் இந்த பைக்கில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. ஹீரோ மேவ்ரிக் 440 சிசி ஆயில் கூல்டு எஞ்சினுடன் வருகிறது.
இது 36 Nm டார்க்கையும், 27 பிஎச்பி பவரையும் 4000 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் எரிபொருள் நிரப்பும் டேங்கின் கொள்ளளவு 13.5 லிட்டராக உள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 175 மிமீ ஆகும். முன்பக்க டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்பக்க இரட்டை ஷாக் அப்சார்பர்கள், டிஸ்க் பிரேக்குகள், அலாய் வீல்கள் போன்றவை இந்த பைக்கின் அடிப்படை அம்சங்களாக உள்ளன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் இணைப்பு, மொபைல் நோட்டிஃபிகேஷன்ஸ், நேவிகேஷன் சிஸ்டம் போன்றவை மேம்பட்ட அம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.