ஹரி இயக்கத்தில் விஷாலின் ரத்னம் படம் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்!
விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு ரத்னம் என்று பெயர் வைத்துள்ளனர். ஹரியின் வழக்கமான அரிவாள், டாடா சுமோ கதைதான் இதுவும். ஜீ ஸ்டுடியோஸ் சவுத், ஸ்டோன்பென்ச் பிலிம்ஸ் ஆகியவை இணைந்து படத்தைத் தயாரித்து வருகின்றன.
ரத்னத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாகவும், கௌதம் வாசுதேவ மேனன், சமுத்திரகனி, யோகி பாபு ஆகியோர் முக்கியமான வேடங்களிலும் நடிக்கின்றனர். தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை போன்ற இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
ஹரி – விஷால் கூட்டணியின் முதல் படமான தாமிரபரணி வெற்றி பெற்றது. இரண்டாவது படம் பூஜையும் முதலுக்கு மோசம் செய்யவில்லை. மார்க் ஆண்டனி மூலம் விஷாலின் பெயரும் பிரகாசிக்கத் தொடங்கியிருக்கிறது. இவையனைத்தும் சேர்ந்து ரத்னத்தின் சந்தை மதிப்பை அதிகப்படுத்தியுள்ளன.
படப்பிடிப்பு முடியும் முன்பே படத்தின் திரையரங்கு வெளியீட்டுக்குப் பிந்தைய ஓடிடி வெளியீட்டு உரிமை விற்பனையாகியுள்ளது. அமேசான் பிரைம் சுமார் 18 கோடிகளுக்கு ரத்னம் படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது. இந்தி உரிமைக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில், படம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் இரண்டு மொழி போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.