`வயிற்றுக்குள் சென்றதும் வைப்ரேட் ஆகும்…’ உடல் பருமனைக் குறைக்கும் கேப்ஸ்யூல்!
சாப்பிடுவதை நிறுத்த உதவும் மாத்திரையை இன்ஜினீயர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உடல்பருமனைக் குறைக்க பலரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியை (எம்ஐடி) சேர்ந்த இன்ஜினீயர்கள் அதற்கு எளிமையான வழியில் தீர்வு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் எம்ஐடி மாணவியும், தற்போது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயோஇன்ஜினீயரிங் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் ஷ்ரியா சீனிவாசன் தலைமை யிலான இன்ஜினீயர்கள் குழுவும் இது குறித்து ஆய்வு செய்தது.
சாதாரணமாக நமக்கு பசி உணர்வு வரும்போது சாப்பிடுவோம். வயிறு நிறைந்ததும், `போதும்’ என மூளைக்கு வயிறு சிக்னல் தரும். அதன்பின் வயிறு நிறைந்ததற்கான ஹார்மோனை மூளை வெளியிடும்.
மேற்குறிப்பிட்ட ஆய்வுக்குழு செயற்கையாக வயிறு முழுமையடைந்த உணர்வைத் தூண்டும் கேப்ஸ்யூலை கண்டுபிடித்துள்ளது.
விலங்குகள் மீது நடத்தப்பட்ட சோதனையில், 20 நிமிடங்களுக்கு முன்னரே இந்த கேப்ஸ்யூல் கொடுக்கப்பட்டது.
ஒரு சில்வர் ஆக்ஸைடு பேட்டரியால் இயங்கும் இந்த கேப்ஸ்யூல், வயிற்றை அடைந்தவுடன் 30 நிமிடங்கள் வரை அதிரும். இந்த அதிர்வுகள் மெக்கனோரிசப்டார்களைத் தூண்டுகிறது. இது சாப்பிட்ட பிறகு, ஏற்படும் முழுமையான உணர்வை வெளிப்படுத்த மூளையைத் தூண்டி ஹார்மோன் வெளியிடச் செய்கிறது.
விலங்குகளுக்கு கொடுக்கப்பட்ட கேப்ஸ்யூல்கள் உணவு உட்கொள்ளலில் மாற்றத்தை ஏற்படுத்தின. அவை 40 சதவிகித உணவை குறைவாக எடுத்துக்கொண்டன.
அதோடு உடல் எடையும் கணிசமாகக் குறைந்தது. இது உடல் பருமனைக் குறைப்பதில் உதவியது.