எங்கள் ஆட்சி அமைந்ததும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை.. முன்னாள் அமைச்சர் உறுதி!

சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் திமுகவின் தேர்தல் அறிக்கை அதில் முக்கிய பங்காற்றியது. ஐநூறுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றிருந்தாலும் அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு தான் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றது.

திமுக ஆட்சிக்கு வந்த உடன் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதிநிலைமை சீராக இல்லை, நிலைமை சரியான பின்னர் திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இரண்டரை ஆண்டுகள் கழித்து 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை மாற்றி தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

ஒரு கோடி பெண்களுக்கு வழங்கப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தினாலும் தொடர்ந்து பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு தற்போது ஒரு கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 பேர் இணைக்கப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. திமுக மக்களவைத் தேர்தலை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நம்பியே சந்திக்கிறது. ஒரு கோடியே 15 லட்சம் பேர் என்றால் அவர்களது குடும்பத்தினரையும் சேர்த்தால் மிக அதிகளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறலாம் என்று கணக்கு போடுகிறது.

இந்த திட்டத்தின் தாக்கத்தை எதிர்கட்சிகளும் உணர்ந்து வருகின்றன. அதனால் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்களை திமுகவுக்கு எதிராகவும் தங்களுக்கு சாதகமாகவும் திருப்ப முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் கோவை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்நேற்று நடைபெற்றது. இதில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை அனைத்து பெண்களுக்கும் கொடுக்கப்படவில்லை. எடப்பாடியார் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, போராடிய பின்னர்தான் பாதி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்பட்டது. உரிமைத் தொகை தற்போது வாங்குபவர்களுக்கு அதை நிறுத்தி விட முடியாது. எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் உரிமை தொகை வழங்கப்படும். மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களிடம் கூட்டத்திற்கு வரவில்லை என்றால் பணம் நிறுத்தி விடுவோம் என்று திமுகவினர் சொல்வார்கள். அப்படியெல்லாம் பணத்தை நிறுத்த முடியாது. நாங்கள் விட்டு விட மாட்டோம்” என்று கூறினார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *