புதிய ரேஷன் கார்டுகள் எப்போது வழங்கப்படும்? மேலும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டுமா?
தமிழ்நாட்டில் புதிதாக திருமணமானவர்கள் செய்யும் முக்கியமான விஷயங்களில் ஒன்று புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது. குடும்பத்திற்கு தேவையான அரிசி, சர்க்கரை, பருப்பு ஆகியவற்றை குறைந்த விலையில் பெற முடியும் என்பதை தாண்டி, ரேஷன் அட்டை என்பது அடையாள ஆவணமாகவும் உள்ளது. மேலும் அரசின் சலுகைகள், நிவாரணங்களை பெறவும் ரேஷன் கார்டு அவசியமாகிறது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 30 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் மாவட்டம் விட்டு மாவட்டம் குடி பெயரும் மக்களுக்கு அவர்களின் புதிய முகவரிக்கும் புதிய குடும்ப அட்டை நகலை ரூ.25 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதே போல் ரேஷன் அட்டையை தொலைத்தவர்களும் உரிய கட்டணம் செலுத்தி நகல் அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துவதை ஒட்டி கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. செப்டமர் 2023 முதல் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மகளிர் உரிமை தொகை ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 7 மாதங்களில் 5000 முதல் 8000 ரேஷர் கார்டுக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. புதிய ரேஷன் கார்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாமலும், அச்சிடும் பணிகளும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டும் உள்ளதால் தமிழகம் முழுவதும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டாலும் புதிய ரேஷன் கார்டுகளை அச்சடிக்க முடியாது. இதனால் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோர் மேலும் 6 மாதங்களுக்கு ரேஷன் கார்டு பெற முடியாத நிலை ஏறப்டும். எனவே புதிய ரேஷன் கார்டுகளை வழங்கும் பணிகளை உடனடியாக தொடங்க அரசு உத்தரவிட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.