ரூ.10 லட்சத்தில் வரவுள்ள டாடா கர்வ் விற்பனைக்கு எப்பொழுது..!
டாடா மோட்டார்ஸ் வெளியிட உள்ள ஸ்போர்ட்டிவ் கூபே ரக ஸ்டைல் பெற்ற கர்வ் (Tata Curvv) கான்செப்ட்டின் அடிப்படையிலான மாடலில் முதலில் எலக்ட்ரிக், அடுத்து ICE என விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.
2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியான கான்செப்ட்டில் கர்வ் என வெளியான நிலையில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு பாரத் மொபைலிட்டி அரங்கில் இந்த கான்செப்ட் உற்பத்தி நிலையை எட்டியது. வரும் 2024-2025 ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர் 2024) விற்பனைக்கு கர்வ்.இவி வெளியாக உள்ளது. எலக்ட்ரிக் மாடல் விற்பனைக்கு வந்த அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு அதாவது 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதத்தில் கர்வ் ICE விற்பனைக்கு வெளியிடப்படலாம்.
டாடா கர்வ் EV
சந்தையில் உள்ள நெக்ஸான்.இவி காருக்கு மேலாக நிலைநிறுத்தப்பட உள்ள Curvv.ev ஆனது சமீபத்தில் வெளியான பஞ்ச்.இவி காரில் இடம்பெற்றிருந்த புதிய Acti-EV பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மாடலாக வரவுள்ளதால் 40 முதல் 60 kWh வரையிலான பிரிவில் இரண்டு மாறுபட்ட பேட்டரி பெற்று 500 கிமீ முதல் 600 கிமீ வரையிலான ரேஞ்ச் பெற்று ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கர்வ் இவி மாடல் சந்தைக்கு அறிமுகம் செய்யப்படும் பொழுது போட்டியாளர்களாக எம்ஜி ZS EV, வரவிருக்கும் மாருதி eVX, ஹூண்டாய் கிரெட்டா ev, கோனா எலக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா XUV e.8 ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ள டாடா கர்வ்.ev விலை ரூ.18 முதல் ரூ.19 லட்சத்தில் துவங்கலாம்.
டாடா கர்வ் ICE
எலக்ட்ரிக் மாடலை தொடர்ந்து வரவுள்ள கர்வ் ICE காரில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் பெற்று ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் என இருவிதமான ஆப்ஷனிலும் வரவுள்ளது. 125 PS பவர் மற்றும் 225 Nm வழங்குகின்ற 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 170 PS பவர் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் என இரண்டு பெட்ரோல், 115 PS மற்றும் 260 Nm வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் பெற உள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ள கர்வ் விலை ரூ10 லட்சம் முதல் ரூ.20 லட்சத்துக்குள் அமையலாம்.