புது கார் வாங்கியவுடன் சீட் கவரைக் கிழிக்க வேண்டும்! ஏன் தெரியுமா?
புதிய கார்கள் வாங்குபவர்கள் பலர் விடாப்பிடியாக சீட்களை மூடியிருக்கும் பாலிதீன் கவர்களைக் நீண்டகாலம் வரை அகற்றாமல் பாதுகாத்து வைத்திருப்பார்கள். ஆனால் அந்தக் கவரை பத்திரமாக வைத்திருப்பதால் காருக்கோ காரில் பயணிப்பவர்களுக்கோ எந்த நன்மையும் இல்லை.
பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்போது வரும் பெரும்பாலான கார்களில் ஏர்பேக் வசதி இருக்கிறது. இந்த ஏர்பேக்குகள் சீட்டிற்கு உள்ளே இருக்கும். சீட் மீது பாலிதீன் கவர் இருந்தால், அவசரத் தேவை ஏற்படும் நேரத்தில் ஏர்பேக் வெளியே வர தடையாக இருக்கும். இதனால் சீட்டை மூடியிருக்கும் கவரை அகற்றுவது நல்லது.
பாலிதீன் கவர்களை நீக்குவதால் சீட்டில் உட்காருவதற்கும் கூடுதல் வசதியாக இருக்கும். பாலிதீன் கவரால் மூடிய இருக்கையைவிட அதை அகற்றிவிட்ட இருக்கையில் சொகுசாக அமர்ந்து பயணிக்கலாம். திரீடென பிரேக் போடும்போதோ கார் திருப்பங்களில் வளைந்து செல்லும்போதோ சீட்டை விட்டு வழுக்கிச் செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் சில சமயங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
கோடை காலத்தில் பாலிதீன் கவர்கள் போர்த்திய இருக்கையில் உட்கார்ந்திருப்பது உடல்நலனையும் பாதிக்கக்கூடும். பாலிதீன் கவர் மூடிய சீட் மீது உட்கார்ந்து நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டால் காருக்குள் அமர்ந்திருப்பதே சிரமானதாக மாறிவிடும்.
அப்படியானால், புதிய கார்களில் இருக்கையை பாலிதீன் கவர் போட்டு முடுவதற்குக் காரணம் என்ன? தூசி அடையாமல் இருப்பதற்குதான் அப்படி பத்திரமாக மூடி வைக்கப்படுகிறது என்று நினைத்து கவரை அகற்ற வேண்டாம் என முடிவு செய்பவர்கள் இருக்கலாம். ஆனால், பாலிதீன் கவரை நீக்கவில்லை என்றால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு அவற்றை அப்புறப்படுத்துவதே நல்லது.
கார் வாங்கியவுடன் பாலித்தீன் சீட் கவரை நீக்கினால் எந்த விதமான அசவுகரியங்களும் இல்லாமல் உட்கார்ந்து, காரில் பயணிக்கலாம். இதன் மூலம் ஓட்டுநரும் வாகனத்தை இயக்குவதில் முழு கவனத்துடன் வசதியாக அமர்ந்துகொள்ளலாம். எனவே பாதுகாப்பான பயண அனுபவத்தைப் பெற பாலிதீன் கவர் இல்லாமல் இருப்பதே நல்லது.