டாடா குழும நிறுவனங்களில் என்னென்ன பங்குகளின் விலை உயர வாய்ப்புள்ளது?

சென்னை: இந்தியாவில் தொழில் சாம்ராஜ்யம் என்ற உடன் நம் நினைவுக்கு வருது டாடா குழுமமாக தான் இருக்கும். ஐடி, வாகன உற்பத்தி, துணி, ஸ்டீல் என டாடா குழுமம் கால்பதிக்காத துறையே இல்லை. இப்படி கால் பதித்த இடங்களில் எல்லாம் வெற்றி வாகை சூடுவது தான் டாடாவின் பழக்கம்.
எனவே பங்குச்சந்தை முதலீடுகளை பற்றி ஆலோசனை நடத்தி வருபவர்கள் நிச்சயம் டாடா குழும பங்குகளை வாங்கி வைக்கலாம் எதிர்காலத்தில் நல்ல லாபம் தரக்கூடியவை என்கின்றார் பங்குச்சந்தை நிபுணர் தர்மஸ்ரீ ராஜேந்திரன்.
டாடா குழுமத்தை பொறுத்தவரை அதன் கீழ் உள்ள நிறுவனங்களில் சுமார் 25 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக டிசிஎஸ் நிறுவனம் நல்ல லாபம் தரக்கூடியது. டாடா குழும நிறுவனங்களிலேயே கடனே இல்லாத நிறுவனம் என்றால் அது டிசிஎஸ் தான்.
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 4,044 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகிவருகிறது. கடந்த ஓராண்டில் இந்த பங்கு 20% லாபத்தையும், 5 ஆண்டுகளில் 102.18% லாபத்தையும் தந்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் 14.51 லட்சம் கோடி. 2.90% டிவிடெண்ட் தரக்கூடியது என்பதால் முதலீட்டாளர்களுக்கு லாபம் தரும்.
டாடா பவர்: டாடா குழுமத்தில் 1.26 லட்சம் கோடி சந்தை மூலதனம் கொண்டிருக்கிறது டாடா பவர். ஒரு பங்கின் விலை 395.90 ரூபாய் என வர்த்தகமாகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்த பங்கு முதலீட்டாளர்களுக்கு 464.50% லாபத்தையும், கடந்த ஓராண்டில் 89.5% லாபத்தையும் ஈட்டி தந்துள்ளது. இதன் ஆண்டு வருவாய் 56,547 கோடி, லாபம் 3,810 கோடி ரூபாய் என உள்ளது.
டாடா ஸ்டீல்: டாடா குழும நிறுவனங்களில் 150 ரூபாய் என்ற அளவில் கிடைக்கும் ஒரு பங்கு இது. கடந்த ஓராண்டு காலத்தில் முதலீட்டாளர்களுக்கு 40% லாபம் தந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7.71% என லாபம் ஈட்டி தந்துள்ளது.
எனவே டாடா குழும பங்குகளில் குறைந்த பணத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற பங்கு இது. இதன் சந்தை மூலதனம் 1.89 லட்சம் கோடி ஆகும். 2.32% டிவிடெண்ட் வழங்கும் பங்கு என்பதால் முதலீடு செய்ய சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.
டாடா கன்ஸியூமர்ஸ்: டாடா கன்ஸியூமர்ஸ் நிறுவனத்தின் பங்கு 1,217 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இந்த பங்கு கடந்த 5 ஆண்டுகளில் 512.10% மற்றும் ஓராண்டில் 70.63% லாபம் தந்துள்ளது. இதன் சந்தை மூலதனம் 1.14 லட்சம் கோடி. இதுவும் கடனே இல்லாத ஒரு நிறுவனமாகும். இந்த ஆண்டு வருமானம் 13,952 கோடி ரூபாய், லாபம் 1,347 கோடி ரூபாய்.
பொதுவாக டாடா குழுமம் முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் மரியாதையும், பங்குகளை வைத்திருப்பதற்கான பலன்களையும் அள்ளி தரக்கூடிய நிறுவனம் என கூறும் தர்மஸ்ரீ முதலீட்டாளர்கள் இந்த பங்குகளை கருத்தில் கொள்ளலாம் என யோசனை தெரிவிக்கிறார்.