யாருப்பா நீ? 42 பந்தில் 101 ரன்.. பவுலிங்கில் 2 விக்கெட்.. ஆர்சிபி ஆல் – ரவுண்டர் வெறி ஆட்டம்
தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ டி20 (SA20) தொடரில் இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ் ருத்ர தாண்டவம் ஆடி இருக்கிறார். பேட்டிங்கில் அதிரடியின் உச்சத்தை தொட்ட அவர், அடுத்து பந்துவீச்சிலும் கலக்கினார். ப்ரீடோரியா கேபிடல்ஸ் – டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையே நடந்த இந்தப் போட்டியில் ப்ரீடோரியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு இங்கிலாந்து வீரர்களான பில் சால்ட் – வில் ஜாக்ஸ் துவக்கம் அளித்தனர். சால்ட் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், வில் ஜாக்ஸ் அதிரடியாக ரன் குவித்தார்.
வில் ஜாக்ஸ் தவிர அந்த அணியின் கோலின் இங்கிராம் மட்டுமே ஓரளவு ரன் சேர்த்தார். அவர் 23 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். யாரும் சரியாக ஆடாத நிலையில் வில் ஜாக்ஸ் தனி ஆளாக அணியின் ஸ்கோரை மின்னல் வேகத்தில் உயர்த்தினார். 8 ஃபோர், 9 சிக்ஸ் அடித்த அவர் 42 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ப்ரீடோரியா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.
அடுத்து டர்பன் அணி சேஸிங் செய்ய வந்த போது, வில் ஜாக்ஸ் தான் முதல் ஓவரை வீசினார். வலது கை ஆஃப் பிரேக் ஸ்பின்னரான அவர் பந்துவீச்சிலும் கலக்கினார். 3 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். டர்பன் அணியின் பேட்டிங்கில் மேத்யூ 33, டி காக் 27, ஸ்மட்ஸ் 25, கேப்டன் கேஷவ் மகாராஜ் 25 ரன்கள் சேர்த்தனர். ஆனாலும், அந்த அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. டர்பன் அணி 20 ஓவர்களில் 187 ரன்கள் மட்டுமே எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து அணியில் தொடர்ந்து இடம் பெற முடியாமல் தவித்து வரும் வில் ஜாக்ஸ் இந்த ஆட்டம் மூலம் தனக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தையும் அணி நிர்வாகத்துக்கு ஏற்படுத்தி இருக்கிறார். 2024 டி20 உலகக்கோப்பை அணியில் அவர் முக்கிய வீரராக இடம் பெற வாய்ப்பு உள்ளது. இவர் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் இடம் பெற்றுள்ளார்.