யார் இந்த ரிவாபா? இன்ஜினியர் டூ பாஜக எம்எல்ஏ.. ஜடேஜாவுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி? முழு பின்னணி!

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திரா ஜடேஜாவின் மனைவி ரிவாபா பற்றி பார்க்கலாம்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஜடேஜா பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். அப்போது மைதானத்தில் இருந்த ஜடேஜாவின் மனைவி ரிவாபா, திடீரென காலில் விழுந்து வணங்கியது ரசிகர்களிடையே ட்ரெண்டாகியது. இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜடேஜா மனைவி ரிவாபா, தனது குடும்பத்தையே பிரித்துவிட்டதாக தந்தை அனிருத்சிங் ஜடேஜா குற்றம்சாட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1990ஆம் ஆண்டு ராஜ்கோட்டை சேர்ந்த ஹர்தேவ் சிங் சொலங்கி – பிரஃபுல்லாபா சொலங்கி தம்பதியினருக்கு பிறந்தவர் தான் ரிவாபா. அதன்பின் அத்மியா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரில் மெக்கானிக்கல் துறையில் பொறியியல் படித்தார். இவரின் தந்தை ரயில்வே துறையில் பணியாற்றி வந்தாலும், இவரின் மாமா ஹரி சிங் சொலங்கி காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவியில் இருந்தவர். அதேபோல் கர்னி சேனா அமைப்பின் மகளிரணியில் முக்கிய பதவியில் இருந்து வந்தார் ரிவாபா.
இவரும் ரவீந்திரா ஜடேஜாவின் சகோதரியுமான நைனாபாவுடன் நெருங்கிய நட்பில் இருந்து வந்தனர். ஒரு பார்ட்டியில் ரிவாபா ஜடேஜாவை சந்திக்க, அதன்பின் இருவரும் சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். அதன்பின் குடும்பத்தினரிடம் ஜடேஜா வெளிப்படையாக கூற, ராஜ்கோட்டில் ஜடேஜா நடத்தி வரும் “ஜட்டு’ஸ் ஃபுட் ஃபீல்ட்” ஹோட்டலிலேயே நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன்பின் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜடேஜா – ரிவாபா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதன்பின் இந்த தம்பதியினருக்கு 2017ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட ரிவாபாவுக்கு பாஜக சார்பாக வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த தொகுதியில் தன்னை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட நைனாபாவை, 88,835 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
34 வயதிலேயே பாஜகவில் எம்எல்ஏ பொறுப்பில் உள்ள ரிவாபாவுக்கு அரசியலில் மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அரசியல் மற்றும் ஜடேஜாவின் தொழில்கள் நடத்தி வரும் ரிவாபாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை மட்டும் 2.2 மில்லியன். மேலும், ரிவாபாவின் தேர்தல் வெற்றிக்கு அவரின் கணவரும் இந்திய கிரிக்கெட் வீரருமான ரவீந்திர ஜடேஜாவின் தேர்தல் பிரச்சாரமும் முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.